பள்ளிப்பட்டு அருகே ஏரி நிரம்பியதால் கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்; பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை
பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் ஏரி நிரம்பியதால் கரையை உடைத்து பொதுப்பணித்துறையினர் தண்ணீரை வெளியேற்றினார்கள்.
ஆபத்தான நிலையில் ஏரி
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. வெளியகரம் மற்றும் அதை சுற்றியுள்ள இரு தலைவாரி பட்டடை, வெங்கட்ராஜ் குப்பம் உள்பட 4 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர்களை விளைவிக்க இந்த ஏரியை தான் நம்பி உள்ளனர். ஆனால் இந்த ஏரியில் பல ஆண்டுகாலமாக பராமரிப்பு சரிவர இல்லாததால் தூர் வாரப்படாமல் மேடாக மாறி உள்ளது. இதனால் பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் ஏரியின் கரை சில இடங்களில் உடையும் ஆபத்தான நிலை ஏற்பட்டது.
கரை உடைப்பு
இதனால் இந்த ஏரியை சுற்றியுள்ள 4 கிராமங்களை சேர்ந்த மக்கள் எந்த நேரத்தில் ஏரி உடையுமோ? கிராமத்திற்குள் தண்ணீர் வந்து விடுமோ? என்ற பயத்தில் இருந்தனர்.
இதுகுறித்து கேள்விப்பட்ட பொதுப்பணித்துறையினர் நேற்று வெளியகரம் ஏரிக்கு சென்று ஏரியின் ஒரு பகுதி கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றினார்கள். இந்த தண்ணீர் அருகிலுள்ள லவா ஆற்றுக்கு சென்று கொண்டிருக்கிறது.
Related Tags :
Next Story