கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் விளக்கூரில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் விளக்கூரில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது
x
தினத்தந்தி 29 Nov 2021 4:23 PM GMT (Updated: 29 Nov 2021 4:23 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிறுத்திவைக்கப்பட்ட ஊராட்சிமன்ற துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் விளக்கூரில் மீண்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

ரிஷிவந்தியம், 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால், சில ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல், பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. 

அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட ஊராட்சிகளில் நேற்று மறைமுக தேர்தல் நடத்தப்பட்டு, துணைத்தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.  அதன்படி, ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம் கடம்பூர் ஊராட்சியின் துணைத்தலைவர் பதவிக்கு 5-வது வார்டு உறுப்பினர் செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

இதேபோல் ஜம்பை ஊராட்சியில் நடந்த மறைமுக தேர்தலில் தங்கராசு என்பவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜெயந்தியை விட கூடுதல் வாக்குகள் பெற்று, தங்கராசு துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

தியாகதுருகம் ஒன்றியம்

தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள வரஞ்சரம் ஊராட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான கார்த்திகேயன் தலைமையில் துணைத் தலைவருக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் 4 வது வார்டு உறுப்பினர் செந்தில்ராஜா ஊராட்சி மன்ற துணைத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஒத்திவைப்பு

விளக்கூர் ஊராட்சியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவப்பிரகாசம் தலைமையில் துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. ஊராட்சியில் 6 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 5 பேர் அலுவலகத்திற்கு வந்து வருகை பதிவு செய்தனர். 

இதனை தொடர்ந்து 3 பேர் வெளியேறினர். மீதம் 2 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மட்டுமே இருந்தனர். எனவே வார்டு உறுப்பினர்கள் குறைவாக உள்ளதாக கூறி ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான மறைமுக தேர்தலை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஒத்திவைத்தார். 

அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இன்ஸ்பெக்டர்கள் (கள்ளக்குறிச்சி) முருகேசன், (தியாகதுருகம்) ராமதாஸ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


சங்கராபுரம்

சங்கராபுரம் ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் 6-வார்டு உறுப்பினர் ரஞ்சிதாவும், மஞ்சபுத்தூர் ஊராட்சியில் 1-வது வார்டு உறுப்பினர் தவமணியும் போட்டியின்றி துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ராமராஜபுரம் ஊராட்சியில் 2-வார்டு உறுப்பினர் சனாவுல்லா வாக்கெடுப்பில் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Next Story