உ.கீரனூரில் 7½ செ.மீ. மழை கொட்டியது வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு


உ.கீரனூரில் 7½ செ.மீ. மழை கொட்டியது வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2021 10:07 PM IST (Updated: 29 Nov 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

உ.கீரனூரில் 7½ செ.மீ. மழை பதிவானது. தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலம் ஒன்று அடித்து செல்லப்பட்டு, அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி, 

வடகிழக்கு பருவ மழை தொடங்கியதில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கன முதல் மிக கன மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ந்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 
நேற்றும் மழையின் தாக்கம் குறையவில்லை. அவ்வப்போது ஓரிரு நிமிடங்கள் மழை லேசாக பெய்வதும், அடுத்து சில வினாடிகள் பெருமழையாக மாறி பின்னர் ஓய்வெடுப்பதுமாக இருந்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. 

இதற்கிடையே நேற்று மதியம் 12 மணி வரையில் பெய்த மழை அதன் பின்னர் சற்று ஓய்ந்து காண்பட்டது. தொடர்ந்து வானில் கருமேகங்கள் இன்றி, சூரியன் வெளியே தலைக்காட்ட தொடங்கியது. 

அடித்து செல்லப்பட்ட பாலம்

இதேபோல் மூங்கில்துறைப்பட்டு பகுதியிலும் கனமழை பெய்தது. தொடர் மழையால் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. மழை ஓயாமல் தொடர்வதால் வெள்ள நீரை வடிய வைக்க முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதேபோல் பல்வேறு இடங்களிலும் சாலைகளும் சேதமடைந்துள்ளது. 

இந்தநிலையில் பாக்கம் பகுதியிலிருந்து கானாங்காடு செல்லும் சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்ட சிறுபாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

சேதமான பாலத்தை ஒன்றியக்குழு துணைத்தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் மாவட்டத்தில் பிற பகுதிகளான உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், சின்னசேலம், தியாதுருகம் உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. 
 நேற்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக உ.கீரனூரில் 7.5 செ.மீ. மழையும், குறைந்த பட்சமாக மூங்கில்துறைப்பட்டில் 19 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. மாவட்டத்தில் ஏனைய பகுதிகளில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

கள்ளக்குறிச்சி-40
தியாகதுருகம்-50
விருகாவூர்-40
சின்னசேலம்-38
அரியலூர்-31
கடுவானூர்-52
கலையாநல்லூர்-52
கீழ்பாடி-34
முரார்-31

Next Story