கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்கள்


கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்கள்
x
தினத்தந்தி 29 Nov 2021 10:12 PM IST (Updated: 29 Nov 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி:

ஆசிரியரின் குளியல் புகைப்படம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி மனுக்கள் வாங்கினார். 

மாவட்டத்தின் பல்வேறு இடங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். 

லோயர்கேம்ப் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் மாணவ, மாணவிகள் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "எங்கள் பள்ளியின் கணித ஆசிரியர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் வகுப்பு எடுத்த போது, தனது செல்போனில் மாணவ, மாணவிகள் பார்க்கும் வகையில் ஆற்றில் அரைநிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தை வைத்தார். அதுகுறித்து கலெக்டரிடம் கொடுத்த புகாரின் பேரில் அவரை வேறு பள்ளிக்கு கூடுதல் பணிக்கு அனுப்பி வைத்து விட்டனர். 

அதே நேரத்தில் அவருடைய பணியிடத்தை காலிப்பணியிடமாக அறிவிக்கவோ, வேறு ஆசிரியர் நியமிக்கவோ இல்லை. எனவே, வேறு கணித ஆசிரியர் நியமிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

டாக்டர் தற்கொலை வழக்கு

எலக்ட்ரோபதி மருத்துவ சங்க நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "பெரியகுளம் அருகே ஓமியோபதி டாக்டர் சீனிவாசன் தற்கொலை செய்த சம்பவத்தில் அவரிடம் பணம் கேட்டு மிரட்டிய மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

 தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு நிர்வாகிகள் அளித்த மனுவில், "தேனியில் கிறிஸ்தவ சபை ஊழியர் பரத் என்பவரை மதத்தின் பெயரை சொல்லி தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

 அடுத்தடுத்து ஆர்ப்பாட்டம்

இதேபோல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று அடுத்தடுத்து 5 ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்று மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,

 அந்த பிரச்சினை குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான லாசர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

ஜெய்பீம் திரைப்படம்

தூய்மை பணியாளர் களுக்கு ஒருநாள் ஊதியம் ரூ.424 வழங்க வேண்டும், கொரோனா கால சிறப்பு ஊதியம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. தேனி மாவட்ட அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பச்சைமுத்து தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

தமிழ்நாடு நாட்டு மாடுகள் நலச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைச்செயலாளர் சீராளன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு எதிராகவும், அவரை மிரட்டும் வகையிலும் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். 

விடுதலைக்களம் கட்சி

தேனி மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தினருக்கு டி.என்.டி. (பழங்குடி சீர்மரபினர்) என்று சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலைக்களம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிறுவன தலைவர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

அதுபோல், சுருளி அருவி பகுதியில் சிறு கடைகள் நடத்தும் வியாபாரிகள், பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். சுருளி அருவியை திறக்க வேண்டும், நுழைவு கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டம் நடத்திய அமைப்பினர் தங்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.

Next Story