‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
x
தினத்தந்தி 29 Nov 2021 10:28 PM IST (Updated: 29 Nov 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டி செய்தி எதிரொலி:
தூர்வாரப்பட்ட வாய்க்கால்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சின்னம்மாள் நகரில் உள்ள மழை நீர் வடிகால் வாய்க்கால் கடந்த சில நாட்களாக தூர்வாரப்படாமல் கிடந்தது. இதனை சுட்டிக்காட்டி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்தனர்.இதனால் அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழ் மற்றும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் வெகுவாக பாராட்டினர்.
-ஜெய்சங்கர். சின்னம்மாள் நகர், மன்னார்குடி.

வடிகால் வசதி வேண்டும்

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட 30, 31, 32 ஆகிய வார்டுகளில் உள்ள மழைநீர் வடிகால் முற்றிலுமாக அடைபட்டு விட்டது. இதனால் மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் சாலைகளில் தேங்கி விடுகிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிவதற்கு வடிகாலை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-விக்னேஸ்வர், மயிலாடுதுறை.

சாலையில் அபாய பள்ளம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட அரியலூர் கிராமத்தில் உள்ள பண்ணை தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பண்ணை தெருவில் கடந்த 15 வருடங்களாக சாலைவசதி இல்லை. பல இடங்களில் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலையில் அபாய பள்ளம் உள்ளது. இதில் பலர் விழுந்து படுகாயமடைந்துள்ளனர். இதன் வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் இந்தசாலையில் தான் மயானத்திற்கு செல்ல வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், பண்ணை தெரு.

அபாய நிலையில் மின் கம்பம்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி பிரதான சாலையில் சத்திரம் அருகே உள்ள மின் கம்பம் பல மாதங்களாக சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த மின் கம்பம் எப்போது விழும் என்ற அச்சத்துடன் பொதுமக்கள் அந்த வழியாக சென்று வருகின்றனர்.  மழைக்காலம் என்பதால் சாய்ந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து சாய்ந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும்.
-பொதுமக்கள், சத்திரம்.

Next Story