தியாகதுருகம் பகுதியில் தொடர் மழை: 7ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் சேதம்
தியாகதுருகம் பகுதியில் தொடர் மழையின் காரணமாக 7ஆயிரம் ஏக்கர் உளுந்து பயிர் சேதமானது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் பகுதியில் உள்ள திம்மலை, சிறுநாகலூர், வேங்கைவாடி உள்ளிட்ட சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் உளுந்து பயிர்சாகுபடி செய்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது பருவமழை இந்த பகுதியில் இடைவிடாமல் பெய்து வருகிறது. இதனால் உளுந்து வயல்களை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. எனவே பயிர்கள் அனைத்தும் தண்ணீரின் உள்ளே இருந்தே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழை விடாமல் பெய்வதால், அதை வடியவைக்கவும் விவசாயிகளால் முடியவில்லை. 7 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவிலான உளுந்து பயிர் முற்றிலுமாக சேதமடைந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏக்கருக்கு சுமார் ரூ.8 ஆயிரம் செலவு செய்து உளுந்து பயிர் செய்து பராமரித்து வந்தோம். இந்நிலையில் தொடர் மழை காரணமாக உளுந்து பயிர் முற்றிலும் அழுகி போய்விட்டது.
இதை கணக்கீடு செய்து அரசு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என்றார். இது குறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இது தொடர்பாக கணக்கெடுக்கும் பணி நடந்து வருவதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story