வெளிநாடு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி கைது
வெளிநாடு தப்பிச்சென்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் தலைவர் தேர்தல் தொடர்பாக, வாலாந்தரவையைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் தர்மா (எ) தர்மராஜன் தரப்பினருக்கும், வாலாந்தரவை அம்மன்கோவில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சந்திரன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 20-ந் தேதி வாலாந்தரவையில் 18 பேர் அடங்கிய கும்பல் வாலாந்தரவையைச் சேர்ந்த பூமிநாதன், விஜய் ஆகியோரை வெட்டி கொலை செய்தனர். இதையடுத்து 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி கேணிக்கரை காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் நடந்துசென்ற வாலாந்தரவை சுப்பிரமணி மகன் கார்த்திக், ராமநாதபுரம் முத்துராமலிங்கசுவாமி கோவில்தெரு தவமணி மகன் விக்கி என்ற விக்னேஷ் பிரபு ஆகியோர் மீது கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை வீசியும் ஆயுதங்களால் தாக்கியும் கொலை செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கேணிக்கரை போலீசார் அம்மன் கோவில் பெரியசாமி மகன் சந்திரன் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் தரப்பினர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான சந்திரன் என்பவர் கொலை நடந்த மறுதினமே தலைமறைவாகி வெளிநாட்டிற்கு தப்பிச்சென்று விட்டார். இதனால் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் இறங்கிய சந்திரனை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்து ராமநாதபுரம் கேணிக்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அழைத்து வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை சம்பவத்தில் தலைமறைவாகி வெளிநாடு தப்பிசென்ற முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story