அய்யப்பன்தாங்கலில் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்


அய்யப்பன்தாங்கலில் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 29 Nov 2021 10:43 PM IST (Updated: 29 Nov 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

அய்யப்பன்தாங்கலில் மழைநீரை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்.

பூந்தமல்லி,

சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தனலட்சுமி நகர், மதுரம் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 20 நாட்களாக வீடுகளை சுற்றிலும் இடுப்பளவுக்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அய்யப்பன்தாங்கல் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் தண்ணீரை அகற்ற எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. அப்பகுதியில் அதிகாரிகள் வந்து பார்த்தாலும் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு செல்கிறார்களே தவிர தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்ற யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

வீடுகளை சுற்றிலும் தேங்கி நிற்கும் மழைநீரால் தாங்கள் உணவு, உடை இன்றி கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து நேற்று அய்யப்பன்தாங்கலில் மவுலிவாக்கம்-மாங்காடு சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மழைநீரை அகற்ற உரிய அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story