விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தரைப்பாலங்கள் மூழ்கியதை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது


விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தரைப்பாலங்கள் மூழ்கியதை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது
x
தினத்தந்தி 29 Nov 2021 11:03 PM IST (Updated: 29 Nov 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் தரைப்பாலங்கள் மூழ்கியதை அடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது

விழுப்புரம்

பலத்த மழை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர் கனமழையினால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை விடிய, விடிய தூறிக்கொண்டே இருந்தது. இடையிடையே அவ்வப்போது கனமழையாகவும் கொட்டித்தீர்த்தது. அதன் பிறகு நேற்று காலை மழை சற்று ஓய்ந்த நிலையில் மீண்டும் அதி காலை 4 மணியில் இருந்து பலத்த மழை பெய்தது.

குடியிருப்புகளை சூழ்ந்தது

இதனால் பிரதான சாலை மற்றும் தெருக்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே எங்கும் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அவற்றை வீட்டின் உரிமையாளர்கள் பாத்திரம் வைத்து இறைத்து அப்புறப்படுத்தினர். 
விழுப்புரம் நகர பகுதியில் குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை நகராட்சி சார்பில் மோட்டார் வைத்து வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
சென்னை-விழுப்புரம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, நேருஜி சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால்  வாகனங்கள் சீரான வேகத்தில் ஊர்ந்து சென்றதை காண முடிந்தது. 

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கனமழையினால் தென்பெண்ணையாறு, பம்பை ஆறு, மலட்டாறு, சங்கராபரணி ஆறு, வராக ஆறு, கோரையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வேகமாக செல்கிறது. அதுபோல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இதன் காரணமாக ஆறு, ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் அருகில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதோடு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தின் உள்ளே மழை நீர் புகுந்ததால் பஸ்கள் வெளியே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி சென்றன. 

தரைப்பாலங்கள் மூழ்கின

விழுப்புரம் அருகே கெடாரில் இருந்து காணை செல்லும் வழியில் பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அகரம்சித்தாமூரில் உள்ள தரைப்பாலம் மூழ்கியதால் க.செல்லங்குப்பம், வாழப்பட்டு, சூரப்பட்டு, குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஆனால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் சிலர் அந்த தரைப்பாலத்தை கடந்து சென்றனர். இதையடுத்து காவல்துறை சார்பில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் விழுப்புரம் அருகே மலட்டாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பில்லூர்- சேர்ந்தனூர் தரைப்பாலம் மூழ்கியதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சுமார் 4 அடி உயரத்துக்கு தண்ணீர் பாய்ந்தோடுவதால் பாதுகாப்பு கருதி அங்கே போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



Next Story