ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது


ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 12:46 AM IST (Updated: 30 Nov 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருச்சி, நவ.30-
திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
திருச்சியை அடுத்த சோமரசம்பேட்டை அருகே உள்ள மல்லியம்பத்து செங்கதிர்சோலையை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி மைதிலி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லியம்பத்து கிராமத்தில் உள்ள மயான இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்தனர்.
இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க மல்லியம்பத்து ஊராட்சி நிர்வாகத்துக்கு சிவக்குமார் உறுதுணையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலத்தை ஆக்கிரமித்து இருந்த நபர்களுக்கும், சிவக்குமாருக்கும் விரோதம் ஏற்பட்டது.
2 பேர் கைது
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த சிவக்குமாரிடம் அதே ஊரை சேர்ந்த 2 பேர் தகராறு செய்து அவரை கட்டையால் தாக்கி விட்டு தப்பினர். இதில் படுகாயம் அடைந்த சிவக்குமாரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தி.மு.க. ஒன்றிய செயலாளர்
இது குறித்து சிவக்குமாரின் மனைவி மைதிலி (35) சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், மல்லியம்பத்து செங்கதிர்சோலையை சேர்ந்த பிரபாகரன் என்கிற மருதராஜ் (34), தீபக் (28), அந்தநல்லூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கதிர்வேல், ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் பிரபாகரன், தீபக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
உடலை வாங்க மறுத்து மறியல்
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அரசு மருத்துவமனையில் திரண்டு இருந்த அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கொலை வழக்கில் மேலும் 2 பேரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து கூடுதல்போலீஸ் சூப்பிரண்டு பால்வண்ணநாதன், போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், தாசில்தார் ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அரசு மருத்துவமனை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாதுகாப்பு கேட்டு போலீசில் மனு
இந்நிலையில் மல்லியம்பத்து ஊராட்சி மன்ற தலைவர் விக்னேஷ்வரன் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த மனுவில், மல்லியம்பத்து கிராமத்தில் அரசு புறம்போக்கு (மயான) இடத்தை சிலர் ஆக்கிரமித்து இருந்தது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றினோம். இதனால் என் மீது ஆத்திரத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார்கள். நான் ஊராட்சிமன்ற தலைவர் என்ற முறையில் எங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகளின் உதவியுடன் அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறேன். ஆகவே எனக்கு மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

Related Tags :
Next Story