வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை


வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 Nov 2021 12:52 AM IST (Updated: 30 Nov 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசியில் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

சிவகாசி, 
சிவகாசியில் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர். 
பட்டாசு ஆலைகள் 
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வரும் நிலையில் 95 சதவீத பட்டாசு ஆலைகள் கடந்த 1 மாதமாக திறக்கப்படவில்லை. இதனால் இந்த ஆலைகளில் பணியாற்றிய தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள். 
இந்த நிலையில் சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் ஆகிய தாலுகாவுக்கு உட்பட்ட இடங்களில் தினமும் போராட்டங்களை பல்வேறு அமைப்புகள் நடத்தி வருகிறது. இந்த நிலையில் சிவகாசியை சுற்றி உள்ள தேன்காலனி, ஊராம்பட்டி, பெரியபொட்டல்பட்டி, விளாம் பட்டி, அய்யம்பட்டி என 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் நேற்று மதியம் சிவகாசியில் உள்ள வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 
பேச்சுவார்த்தை 
பின்னர் அவர்கள் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி தியாகராஜனை சந்தித்து சரவெடிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர். பட்டாசு தொழிலாளர்களின் திடீர் போராட்டத்தால் வெடிப்பொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. 
உடனே சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் திலகராணி மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் பட்டாசு தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

Next Story