தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 29 Nov 2021 7:22 PM GMT (Updated: 29 Nov 2021 7:22 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டி

எரியாத உயர்கோபுர மின்விளக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு பல நாட்களாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் சமூக விரோதிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே உயர்கோபுர மின் விளக்கை சரி செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?
-அம்பிகாமயில், அரசம்பட்டி, கிருஷ்ணகிரி.

சேலம் மாவட்டம் இடங்கணசாலை கே.கே. நகர் 2-வது பஸ்நிறுத்தம் பகுதியில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில மாதங்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் செல்ல பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அச்சப்படுகின்றனர். மேலும் குற்றச்சம்பவங்கள் நடக்கும் முன்பு இந்த உயர் கோபுர மின் விளக்கை சரி செய்து தரவேண்டும்.
ஊர்பொதுமக்கள், கே.கே.நகர், இடங்கணசாலை.

சாலையில் தேங்கும் மழைநீர்
நாமக்கல்லில் சேலம் மெயின் ரோட்டில் முருகன் கோவில் பஸ்நிறுத்தம் பகுதியில் சாலையில் உள்ள மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். மேலும் அந்த பகுதி சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரிகள் முன்வருவார்களா?
ஊர்பொதுமக்கள், நாமக்கல்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மஞ்சுநாத நகரில் சாலையில் மழை நீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
-ஊர்மக்கள், மஞ்சுநாத நகர், ஓசூர்.

பெயர் பலகை தேவை
சேலம் நெடுஞ்சாலை நகர் சபாபதி தெருவில் தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு கழக மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை பற்றிய பெயர் பலகை இல்லாததால் அங்கு செல்ல நோயாளிகளும், கர்ப்பிணிகளும் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மருத்துவமனைக்கு செல்ல பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
குமரன், ஆண்டிப்பட்டி, சேலம்.

சுகாதார சீர்கேடு
நாமக்கல் நடராஜபுரம் தெருவில் இருந்து ரெயில் நிலையம் மற்றும் சேந்தமங்கலம் மேம்பாலம் வழியாக புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் ஓரத்தில் குப்பைகளையும், இறைச்சி, கோழிக்கழிவுகளையும் கொட்டி வருகிறார்கள். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  எனவே இங்கு சுகாதாரத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
ஊர்பொதுமக்கள், நாமக்கல்.
====
தடுப்புச்சுவர் கட்ட வேண்டும்
 சேலம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள குரால்நத்தம் ஊராட்சி 7-வது வார்டு அருந்ததியர் காலனியில் சிறுவர்கள் விளையாடுவதற்கு அண்ணா மறுமலர்ச்சி திட்ட விளையாட்டு மைதானம் உள்ளது. இந்த மைதானத்தையொட்டி நீர் ஓடை செல்கிறது. தற்போது பெய்த மழையில் அங்கு தண்ணீர் அதிகமாக ஓடுகிறது. இதனால் குழந்தைகள் விளையாடும் போது அந்த ஓடையில் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு தடுப்புச்சுவர் கட்டி தர வேண்டும்.
பூபதி, குரால்நத்தம், சேலம்.

மழையால் சேறும், சகதியுமான சாலை
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே தொட்டிபாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து வடக்கு குருசாமிபாைளயம், கல்யாணி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலை மண் சாலையாக உள்ளதால், மழை காலங்களில் சேறும் சகதியுமான சாலையாக மாறிவிடுகிறது. வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?
ஊர் பொதுமக்கள், தொட்டிபாளையம்.

இருளில் மூழ்கும் பிரதான சாலை
தர்மபுரி  4 ரோடு முதல் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி வரை உள்ள பிரதான சாலையில் மைய தடுப்பில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் அந்த பகுதி இரவு நேரத்தில் இருளில் மூழ்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் போதிய  வெளிச்சமில்லாமல் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே மாலை 6 மணி முதல் இரவு முழுவதும் இந்த சாலையில் மைய தடுப்பு பகுதிகளில் மின் விளக்குகள் முழுமையாக எரிவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?
ராஜேந்திரன், தர்மபுரி.
=====
பராமரிப்பு இல்லாத நவீன கழிப்பிடம்
கிருஷ்ணகிரி நகராட்சி பழையபேட்டை மீன் மார்க்கெட் அருகில் நகராட்சியின் நவீன் கழிப்பிடம் பராமரிப்பு  இல்லாமல் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் கடைகள் நடத்துபவர்கள், இயற்கை உபாதைகள் கழிக்க  சிரமப்படுகிறார்கள். எனவே இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அறம்சிகரம் மு.கோபிநாத், கிருஷ்ணகிரி.

விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை 
கிருஷ்ணகிரியில் பெங்களூரு ெசல்லும் சாலையில் ஆர்.சி. பள்ளியின் எதிரில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு அமர்ந்திருக்கும் பயணிகள் அச்சத்துடன்  அமர்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த நிழற்குடையை அப்புறப்படுத்தி, புதிதாக அங்கு நிழற்குடை அமைக்கப்படுமா?
ஊர் பொதுமக்கள், கிருஷ்ணகிரி.

Next Story