தர்மபுரி அருகே முன்விரோதம் காரணமாக தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி படுகொலை தாய் மகன் கைது
தர்மபுரி அருகே முன்விரோதத்தால் தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய் மகனை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி:
தர்மபுரி அருகே முன்விரோதத்தால் தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய்-மகனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முன்விரோதம்
தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள ஏக்கிரியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி. இவருடைய மனைவி மாதம்மாள் (வயது 52). காவேரி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதே பகுதியை சேர்ந்தவர் அருள் (40). தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மாதம்மாளுக்கும், அருளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது மாதம்மாள் அளித்த புகாரின் பேரில் அருளை போலீசார் கைது செய்தனர். இதன் காரணமாக அவர்களிடையே முன்விரோதம் ஏற்பட்டது.
தலையில் கல்லை போட்டு கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு அருள், மாதம்மாளின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றியதால் மாதம்மாளும், அவருடைய மகன் வெங்கடேசனும் (32) சேர்ந்து அருளை சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் அவர்கள் அருளின் தலையில் கல்லை போட்டுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து கிருஷ்ணாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட அருளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தாய்-மகன் கைது
இதுதொடர்பாக தர்மபுரி துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்மாதுரை ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது முன்விரோதத்தால் இந்த கொலை சம்பவம் நடந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதம்மாள், அவரது மகன் வெங்கடேசன் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர். தொழிலாளி படு கொைல சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story