விளை நிலங்களில் தேங்கிய தண்ணீர் வடிகிறது


விளை நிலங்களில் தேங்கிய தண்ணீர் வடிகிறது
x
தினத்தந்தி 30 Nov 2021 1:11 AM IST (Updated: 30 Nov 2021 1:11 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் விளை நிலங்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து வருகிறது. இதுவரை 2,474 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.

தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் விளை நிலங்களில் தேங்கிய தண்ணீர் வடிந்து வருகிறது. இதுவரை 2,474 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
தண்ணீர் வடிகிறது
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றுஅதிகாலை வரை பல்வேறு இடங்களில் மழை பெய்தது. அதன்பிறகு பகலில் மழை பெய்யவில்லை. தொடர் மழையின் காரணமாக 28 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வாழை சாகுபடி செய்துள்ள விளை நிலங்களையும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.
நேற்று மழை பெய்யாததால் விளை நிலங்களில் தேங்கி நின்ற தண்ணீர் வடிய தொடங்கியது. மேலவெளி ஊராட்சியில் வீடுகளை சூழ்ந்து நின்ற தண்ணீரும் வடிய தொடங்கியது. தண்ணீர் வடிந்த விளை நிலங்களில் நெற்பயிர்களை காக்க பூச்சி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். மேலும் களைகள் எடுக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
வீடுகள் சேதம்
இந்த மழையினால் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. தஞ்சை சமுத்திரம் ஏரிய நிரம்பி வழிந்தோடுகிறது. தஞ்சை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 133 குடிசை வீடுகள் பகுதியாகவும், 5 குடிசை வீடுகள் முழுமையாகவும், 33 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் என மொத்தம் 171 வீடுகள் சேதம் அடைந்தன. 9 மாடுகள், 5 கன்றுக்குட்டிகள், 3 ஆடுகள் இறந்தன. மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை மழைக்கு 6 பேர் பலியாகி உள்ளனர். 1,974 குடிசை வீடுகளும், 500 ஓட்டு வீடுகளும் என 2,474 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 420 கால்நடைகள் இறந்துள்ளன.
மழைஅளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
அணைக்கரை-58, மஞ்சளாறு-42, கும்பகோணம்-40, திருவிடைமருதூர்-39, அய்யம்பேட்டை-32, குருங்குளம்-27, ஈச்சன்விடுதி-26, பூதலூர்-24, பட்டுக்கோட்டை-24, தஞ்சை-20, நெய்வாசல்தென்பாதி-20, திருவையாறு-18, வல்லம்-17, ஒரத்தநாடு-15, மதுக்கூர்-15, பேராவூரணி-15, கல்லணை-12, திருக்காட்டுப்பள்ளி-9, வெட்டிக்காடு-9, பாபநாசம்-8.

Next Story