ஏற்காடு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி


ஏற்காடு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 29 Nov 2021 8:21 PM GMT (Updated: 29 Nov 2021 8:21 PM GMT)

ஏற்காடு மலைப்பாதையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறிவிழுந்த கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

ஏற்காடு
கேட்டரிங் கல்லூரி மாணவர்கள்
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் பிரசாந்த். இவருடைய மகன் அபி பிரசாந்த் (வயது 21). இவரும், அதே பகுதியை சேர்ந்த ஏவின்தாமஸ் (21) என்பவரும், ஏற்காட்டில் உள்ள தனியார் கேட்டரிங் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்தனர்.
நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கல்லூரி அருகே உள்ள துரித உணவக கடை ஒன்றின் உரிமையாளரிடம், அவரது மோட்டார் சைக்கிளை இரவல் வாங்கி கொண்டு சேலத்துக்கு மாணவர்கள் இருவரும் புறப்பட்டு வந்தனர். மோட்டார் சைக்கிளை அபி பிரசாந்த் ஓட்டினார். ஏவின் தாமஸ் பின் இருக்கையில் இருந்தார். 
தவறிவிழுந்து பலி
20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்கு இரவில் மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் சாலை சரிவர தெரியாமல் மோட்டார் சைக்கிளை சாலையோரம் உள்ள பாறையின் மீது மோதி இருவரும் தவறி கீழே விழுந்தனர். 
இதில் வண்டியில் பின்னால் இருந்த ஏவின் தாமசுக்கு அதிர்ஷ்டவசமாக லேசான காயமே ஏற்பட்டது. அபி பிரசாந்த் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதனிடையே அந்த வழியாக வந்த ஒரு காரின் டிரைவர், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். 
அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்சில் மாணவர்கள் இருவரும் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அபி பிரசாந்த் சிகிச்சை பலனின்றி இறந்தார். 
வழக்குப்பதிவு
இதையடுத்து விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஏற்காடு போலீசார், மாணவர் அபி பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story