வங்கியில் கடன் பெற்று பல கோடி ரூபாய் மோசடி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


வங்கியில் கடன் பெற்று பல கோடி ரூபாய் மோசடி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 30 Nov 2021 1:51 AM IST (Updated: 30 Nov 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

வங்கியில் பலரது பெயரில் கடன் பெற்று பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் பலர் கலெக்டர் கார்மேகத்திடம் புகார் மனு கொடுத்தனர்.

சேலம்
மக்கள் குறை தீர்க்கும் முகாம்
சேலத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். அப்போது சேலம் பால்மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் மனுக்களை கொடுத்தனர்.
அந்த மனுவில் பால்மார்க்கெட்டில் பொரி வியாபாரம் செய்து வரும் ஒரு நபரிடம், கூலி தொழிலாளராக வேலை பார்த்து வந்தோம். அவர் ஒரு பொதுத்துறை வங்கியில் வங்கி கணக்கு தொடங்க வற்புறுத்தி எங்களிடம் இருந்து போட்டோ, அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றுக்கொண்டார். அதை பயன்படுத்தி எங்கள் கையெழுத்தை போலியாக செலுத்தி எங்கள் பெயரில் சம்பந்தப்பட்ட வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று மோசடி செய்து உள்ளார். எனவே எங்களது கையெழுத்தை போலியாக போட்டு கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நிலம் ஆக்கிரமிப்பு
சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன்் என்பவரின் மனைவி சுமதி தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தை எனது அண்ணன் மகன்கள் ஆக்கிரமித்துக்கொண்டனர். அதை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி மனு கொடுத்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் மண்எண்ணெய் கேன் இருப்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்திய போது நிலத்தை மீட்டுத்தரவில்லை என்றால் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி, டவுன் போலீசில் புகார் கொடுக்கும் படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்த சிராஜூதீன் என்பவர் தலைமையில் சிலர் 30 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ள முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.
நாம் தமிழர் கட்சி
வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில் நுட்ப பாசறை நிர்வாகிகள் மோகனவேல், ராஜேஸ்குமார் ஆகியோர் அரசு நலத்திட்டங்கள், சான்றிதழ்கள் பெற என்னென்ன சான்றிதழ்கள் வேண்டும், எத்தனை நாட்களில் சான்றிதழ்கள் கிடைக்கும் என்ற விவரங்களை மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.

Related Tags :
Next Story