40 ஆண்டுகளாக மதுவிலக்கை அமல்படுத்தி வரும் கிராம மக்கள்


40 ஆண்டுகளாக மதுவிலக்கை அமல்படுத்தி வரும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 30 Nov 2021 3:30 AM IST (Updated: 30 Nov 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

கொப்பல் அருகே காரடகி தாலுகாவில் 40 ஆண்டுகளாக ஒரு கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து மதுவிலக்கை அமல்படுத்தி வருகிறார்கள். மேலும் அந்த கிராமத்தில் மதுபானம் விற்கவும் அனுமதி கிடையாது என்பது தெரியவந்துள்ளது.

பெங்களூரு:கொப்பல் அருகே காரடகி தாலுகாவில் 40 ஆண்டுகளாக ஒரு கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து மதுவிலக்கை அமல்படுத்தி வருகிறார்கள். மேலும் அந்த கிராமத்தில் மதுபானம் விற்கவும் அனுமதி கிடையாது என்பது தெரியவந்துள்ளது.

மதுபானம் அருந்த தடை

கொப்பல் மாவட்டம் காரடகி தாலுகா உலீனூரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜமாபுரா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 400 முதல் 450 குடுமபத்தினர் வசித்து வருகின்றனர். அந்த கிராமத்தில் ஒட்டு மொத்தமாக 2,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக மதுபானம் விற்பனை செய்யவும், மதுபானம் அருந்தவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஜமாபுரா கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு மதுஅருந்தும் பழக்கம் கிடையாது. மதுபானம் அருந்திவிட்டு யாராவது கிராமத்திற்குள் வந்தால், அவர்களை கிராமத்தில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். மதுபானம் அருந்திவிட்டு கிராமத்திற்குள் வருவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் யாரும் மதுஅருந்திவிட்டு கிராமத்திற்கு செல்வது கிடையாது.

மது அருந்திவிட்டு...

அந்த கிராமத்தை சுற்றி 3 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு எந்த ஒரு மதுபான கடையும் கடந்த 40 ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. ஆனால் கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு கிராமத்தில் ஒரு மதுபானக்கடை இருக்கிறது. ஜமாபுரா கிராமத்தை சேர்ந்த சில ஆண்கள் எப்போதாவது மது அருந்துவதற்காக பக்கத்து கிராமத்திற்கு செல்வார்கள். அங்கு மதுஅருந்திவிட்டு, அந்த கிராமத்திலேயே தங்கி விடுவார்கள். தங்களது கிராமத்திற்கு வரமாட்டார்கள்.

தேர்தல் நேரத்தில் சில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கூட, பக்கத்து கிராமத்தில் வசிக்கும் நபர்களுக்கு மதுபானம் வழங்கினாலும், ஜமாபுரா கிராமத்திற்கு மட்டும் மதுபான பாட்டில்களை எடுத்து வருவது கிடையாது என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

40 ஆண்டுகளாக பழக்கம்

மேலும் கடந்த 40 ஆண்டுகளாக இந்த பழக்கம் தங்களது கிராமத்தில் இருப்பதாகவும், இனிவரும் காலங்களிலும் கிராமத்தில் மதுக்கடை திறக்க அனுமதிக்க மாட்டோம், மதுபானம் அருந்திவிட்டு வருபவர்களை கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்றும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கிராமத்தை சேர்ந்த பலர் உயர் பதவியில் இருந்து வருகின்றனர்.

நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளிலும், என்ஜினீயர், போலீஸ் துறையிலும் ஏராளமானவர்கள் பணியாற்றி வருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். கிராமத்தில் வசிப்பவர்கள் மதுஅருந்த கூடாது என்பது தாங்களாகவே எடுத்த முடிவு என்றும், அரசோ, வேறு எந்த அதிகாரிகளோ இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை என்றும் கிராம மக்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

Next Story