பாபநாசம்-கடனாநதி அணைகளில் கூடுதல் நீர் திறப்பு: தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம் தீவு போல் மாறிய குறுக்குத்துறை முருகன் கோவில்
தாமிரபரணியில் கரைபுரளும் வெள்ளம்
நெல்லை:
பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி அணைகளில் இருந்து கூடுதல்நீர் திறக்கப்பட்டு உள்ளதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் தீவு போல் மாறியது.
பலத்த மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பலத்த மழை கொட்டியது. இரவு விடிய, விடிய மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை கொட்டி வருகிறது. நேற்றும் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதையொட்டி பாபநாசம் காரையாறு அணை, சேர்வலாறு அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதுதவிர காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது.
உபரிநீர் திறப்பு
மேலும் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கடனாநதி அணை, கடையம் அருகே உள்ள ராமநதி அணைகளும் ஏற்கனவே நிரம்பி இருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த 2 அணைகளில் இருந்தும் உபரிநீராக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடிக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரும் முக்கூடல் அருகே தாமிரபரணி ஆற்றில் கலந்து ஓடுகிறது.
இதனால் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள முத்துமாலை அம்மன் கோவிலை தொட்டபடி தண்ணீர் செல்கிறது.
கரைபுரளும் வெள்ளம்
நெல்லை தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஓடுவதால் தண்ணீர் இரைச்சலுடன் ஆர்ப்பரித்தவாறு செல்கிறது.
குறுக்குத்துறை முருகன் கோவில் மேல் மண்டபத்தை மூழ்கடிப்பது போல் தண்ணீர் செல்கிறது. கோவிலுக்கு செல்லும் பாலத்தை தண்ணீர் முழுமையாக மூழ்கடித்தது. இதனால் குறுக்குத்துறை முருகன் கோவில் தீவு போல் மாறி காட்சி அளிக்கிறது.
செல்பி எடுத்த மக்கள்
நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள ஆற்றுப்பாலங்களின் மீது பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு தாமிரபரணியின் அழகை தங்களது செல்போனில் படம் பிடித்து செல்கிறார்கள்.
சிலர் செல்பி எடுத்து தங்களது உறவினர்களுக்கு அனுப்புவதுடன், வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்கிறார்கள்.
மூழ்கும் தருவாயில் மேலநத்தம் பாலம்
நெல்லை மேலநத்தம் -கருப்பந்துறை இடையே தாமிரபரணி ஆற்றில் தரைப்பாலம் அமைந்துள்ளது. ஆற்றில் ஆர்ப்பரித்து வரும் தண்ணீர் இந்த பாலத்தின் மேல்பகுதியை தொட்டபடி பாய்ந்தோடுகிறது. பாலத்தின் மீது தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு போலீசார் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு இரும்பு தடுப்புகளை வைத்து சாலையில் பாதி அளவுக்கு அடைத்து உள்ளனர். பாலத்தை தண்ணீர் மூழ்கடித்தால் முழுமையாக போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் ஆற்றுப்பாலத்தில் செல்பி எடுக்க முயன்றவர்களையும் எச்சரித்து அனுப்பினர்.
நீர்மட்டம் வேகமாக உயர்வு
மழை காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 118 அடி உயரம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 8 மணி அளவில் 107.55 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4,393 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாலை 4 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 108.80 அடியாக உயர்ந்தது.
வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 39 அடியாக உள்ளது. அணைக்கு 346 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நம்பியாறு அணை நிரம்பி வழிவதால் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 128 கனஅடியாகவும், வெளியேற்றம் 100 கன அடியாகவும் உள்ளது.
அணைகள் நிரம்பி வழிகின்றன
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் நிரம்பி விட்டன. கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
மேலும் கருப்பாநதி அணையில் இருந்து 100 கன அடி, குண்டாறு அணையில் இருந்து 45 கன அடி, அடவிநயினார் அணையில் இருந்து 40 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
Related Tags :
Next Story