‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 30 Nov 2021 6:57 AM GMT (Updated: 30 Nov 2021 6:57 AM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்வாரியத்தின் பாராட்டுக்குரிய பணி


செங்கல்பட்டு மாவட்டம் பொழிச்சலூரில் மின்கம்பம் கயிறு மூலம் கட்டி மிகவும் மோசமான நிலையில் இருப்பது குறித்து ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதுகுறித்து மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், ‘பாலாற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பொழிச்சலூரை சுற்றியுள்ள வட புதுப்பட்டு, பச்சக்குப்பம் மற்றும் முருங்கை கிராமங்களுக்கு மின்சாரத்தை எடுத்து செல்லும் மின்கம்பங்கள் ஆற்றின் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. எனவே பாலாற்றின் குறுக்கே இல்லாமல் மற்றொரு வழியில் இந்த கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மழைவெள்ளத்துக்கு இடையிலேயும் புதிய மின்கம்பங்களை பொருத்தும் நடவடிக்கையில் மின்வாரிய ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேங்கி கிடக்கும் குப்பைகள்

சென்னை நேரு பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு அருகில் உள்ள கழிவுநீர் அகற்றும் மோட்டார் அறை அருகில் குப்பைகள் அதிகம் தேங்கி உள்ளது. இதனால் இந்த வழியாக நடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. எனவே குவிந்துள்ள குப்பைக்கழிவுகளை அகற்றிட வேண்டும்

- பொதுமக்கள், நேரு பார்க்.

இருக்கைகள் சேதம்

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் வயதான பயணிகள் கால்கடுக்க நிற்க வேண்டி இருக்கிறது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தை சீரமைத்து தர வேண்டும்.

- பயணிகள்.

நெடுஞ்சாலை படுமோசம் 

சென்னை புழல் சிறைச்சாலை சிக்னல் அருகே சாலை மிகவும் மோசமாக இருக்கிறது. பள்ளி வாகனங்கள் அதிகம் செல்லும் பகுதி ஆகும். இந்த சாலை சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலை என்பதால் கனரக வாகனங்களும் அதிகம் செல்கின்றன. அசம்பாவித சம்பவம் நேரிடும் முன்பு இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செப்பனிட்டு சீரமைத்து தர வேண்டும். மேலும் இந்த சாலையில் எங்கெங்கு சேதம் அடைந்துள்ளது என்பதை கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- வாகன ஓட்டிகள்.

கொசுக்கள் உற்பத்தி

சென்னை கொடுங்கையூர் கோவிந்தசாமி நகர் தர்மலிங்கம் தெருவில் மழைநீர் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி வருகின்றன. எனவே இப்பகுதியில் தேங்கிய மழைநீரை மோட்டார் பம்புகளை பயன்படுத்தி வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தர் சிங், கொடுங்கையூர்.

மூடிக்கிடக்கும் பூங்கா

சென்னை அண்ணாநகர் கிழக்கு ‘எல்’ பிளாக்கில் உள்ள மாநகராட்சி பூங்கா (முக்கோண பூங்கா) கொரோனா கால ஊரடங்கின்போது மூடப்பட்டது. ஆனால் கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் பூங்கா இன்று வரை திறக்கப்படவில்லை. இப்போது பெய்து வரும் கனமழையால் இந்த பூங்கா முழுவதும் நீர் தேங்கி நிற்கிறது. குப்பை கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த பூங்காவை பராமரித்து சுத்தம் செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், அண்ணாநகர் கிழக்கு.

அச்சுறுத்தும் மின் இணைப்பு பெட்டி   

சென்னை புளியந்தோப்பு டிகாஸ்டர் ரோட்டில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. தேங்கியிருக்கும் மழைநீரில் மின் இணைப்பு பெட்டியின் வயர்கள் செல்கிறது. ஆங்காங்கே மின் விபத்துகள் நிகழ்ந்து வரும் வேளையில் இந்த மின் இணைப்பு பெட்டி அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பொதுமக்கள், புளியந்தோப்பு.

ரெயில்வே நிர்வாகம் கவனத்துக்கு...

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்ப்பேட்டை ரெயில் நிலையத்துக்கு அருகே உள்ள சுரங்கப்பாதையில் ஒரு மாதமாக மழைநீர் குளம் போல தேங்கி இருக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அருகேயுள்ள தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்துசென்று வருகிறார்கள். எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரங்கப்பாதையில் தேங்கி கிடக்கும் மழைநீரை அப்புறப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

- ஈஸ்வர் ராவ், செவ்வாய்ப்பேட்டை.

நெற்பயிர்கள் வீண்; விவசாயிகள் வேதனை

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பழையனூர் கிராமத்தில் பல ஏக்கர் நெற்பயிர்கள் தொடர்மழையால் சேதம் அடைந்துள்ளது. கடன் வாங்கி இந்த நெற்பயிர்களை பயிரிட்டோம். இப்போது கஷ்டப்பட்டு விளைவித்த பயிர்கள் அனைத்தும் வீணாகி போனதால் வேதனையில் இருக்கிறோம். எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

- விவசாயிகள், பழையனூர் கிராமம்.

எலும்புக்கூடான மின்கம்பம் 

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தர சோழப்புரம் ஏழுமலை நாயக்கர் நகரில் உள்ள மின்கம்பம் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எலும்புக்கூடு போன்று மின்கம்பம் காட்சி அளிக்கிறது. எப்போது வேண்டும் என்றாலும் கீழே விழலாம் என்பது போல் உறுதித்தன்மையை இழந்து இருக்கிறது. அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் நேரிடும் முன்பு இந்த மின்கம்பத்தை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்.

- பொதுமக்கள்.

Next Story