தமிழக-ஆந்திர எல்லையில் கனரக வாகன போக்குவரத்து பாதிப்பு


தமிழக-ஆந்திர எல்லையில் கனரக வாகன போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 6:19 PM IST (Updated: 30 Nov 2021 6:19 PM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் மேம்பாலம் துண்டிக்கப்பட்டதால் கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லையில் கனரக வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தரைப்பாலம் துண்டிப்பு

ஆந்திர மாநிலம் கூடூருக்கும், மணபோலுவுக்கும் இடையே உள்ள ஒரு தரைப்பாலம் தண்ணீர் பெருக்கால் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்து நெல்லூருக்கு செல்லும் போக்குவரத்தில் தடை ஏற்பட்டு உள்ளது.

ஆந்திர மாநில வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அங்கு முகாமிட்டு தரைப்பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தடுத்து நிறுத்தம்

இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணி முதல் சென்னையில் இருந்து ஆந்திரா மற்றும் ஆந்திராவில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் தமிழக-ஆந்திர எல்லையான கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அருகே சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநில போலீசார் இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்திவைத்தனர்.

அதே சமயத்தில் கூடூருக்கு இடைப்பட்ட தூரத்திற்குள் செல்ல கூடிய அரசு பஸ் போக்குவரத்து, அத்தியாவசிய தேவைக்கான வாகனங்களை எதிர் தரப்பில் அதாவது மாற்று பாதையில் செல்ல தமிழக போலீசார் அனுமதித்து வருகின்றனர்.

நேற்று இரவு 9 மணி முதல் மாற்றுப்பாதையில் கனரக வாகனங்களை செல்ல அனுமதி்த்தனர்.

இதனால் 18 மணி நேரம் கனரக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story