விசாரணை கமிஷன் முன் ஆஜராக வந்தபோது பரம்பீர்சிங்- சச்சின் வாசே தனியறையில் சந்திப்பு


படம்
x
படம்
தினத்தந்தி 30 Nov 2021 7:06 PM IST (Updated: 30 Nov 2021 7:06 PM IST)
t-max-icont-min-icon

விசாரணை கமிஷன் முன் ஆஜராக வந்தபோது பரம்பீர்சிங், சச்சின் வாசே தனியறையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மும்பை, 

விசாரணை கமிஷன் முன் ஆஜராக வந்தபோது பரம்பீர்சிங், சச்சின் வாசே தனியறையில் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. 

வாரண்ட் ரத்து

மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங், வெடிகுண்டு கார் வழக்கில் அதிகாரி சச்சின்வாசே சிக்கியதை அடுத்து ஊர்க்காவல் படைக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவர் உள்துறை மந்திரியாக இருந்த அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி ஊழல் புகாரை கூறினார். அதன் பிறகு தலைமறைவானார். இதைத்தொடர்ந்து அவர் மீது கட்டுமான அதிபர்கள், ஓட்டல் அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக மும்பை, தானேயில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன. 

இந்தநிலையில் கடந்த வியாழக்கிழமை மும்பை வந்த அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வருகிறார். இதையடுத்து அவா் மீதான பிடிவாரண்டை மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ரத்து செய்து உள்ளது.

சந்திப்பு
இதற்கிடையே முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக் மீதான மாமூல் புகாரை விசாரித்து வரும் சண்டிவால் கமிஷன் முன் நேற்று முன்தினம் பரம்பீர் சிங் ஆஜரானார். இதேபோல வெடிகுண்டு கார் வழக்கில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசேயும் சண்டிவால் கமிஷன் முன் குறுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். 

அந்த தருணத்தில் பரம்பீர் சிங்கும், சச்சின் வாசேயும் அறை ஒன்றில் தனியாக சுமார் 30 நிமிடம் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விசாரணைக்கு உத்தரவு

இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படுவதாக மாநில அரசு தெரிவித்து உள்ளது. இதுபற்றி மாநில உள்துறை மந்திரி திலீப் வல்சே பாட்டீல் கூறுகையில், “பரம்பீர் சிங், சச்சின் வாசே இருவரும் மும்பையில் நடந்்த மிரட்டி பணம் பறித்த வழக்கில் குற்றவாளிகள். மேலும் சச்சின் வாசே நீதிமன்ற காவலில் உள்ளார். கோர்ட்டு அனுமதியின்றி அவர் யாரையும் சந்திக்கக்கூடாது. இந்த தருணத்தில் அவர்கள் சந்தித்து பேசியது தவறு. இது குறித்து விசாரணை நடத்துமாறு மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நக்ராலேக்கு உத்தரவிட்டு உள்ளேன். மேலும் பல நாட்கள் பணிக்கு வராமலும், பல்வேறு தீவிர வழக்குகளை சந்தித்து வரும் பரம்பீர் சிங் அரசு வாகனத்தை பயன்படுத்தி வருவது குறித்தும் விசாரணை நடத்தப்படும்” என்றார்.
இந்தநிலையில் சச்சின் வாசேயை விசாரணை கமிஷன் முன் ஆஜராகும்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட  4 போலீசாரிடம் மும்பை போலீசார் அதிரடி விசாரணை நடத்தி உள்ளனர். 

 ஓரிரு நாளில் பணியிடை நீக்கம்

இதுபோன்ற பரபரப்புக்கு மத்தியில் பரம்பீர் சிங் ஓரிரு நாட்களில் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து மூத்த உள்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "துறை ரீதியான விசாரணை முடிவுகள், அவர் மீதான குற்ற வழக்குகளை பாா்க்கும் போது அவரை பணியிடை நீக்கம் செய்ய வலுவான காரணங்கள் உள்ளன.

 சொல்லப்போனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அதிக காலதாமதம் செய்யப்பட்டு இருப்பதாகவே உணருகிறோம். அவர் நீண்டகாலம் பணிக்கு வராமல் இருந்ததை அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும்" என்றார்.
 இதேபோல பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்த சச்சின் வாசேயை மீண்டும் பணியில் சேர்த்தது தவறு, முதல்-மந்திரிக்கு பரம்பீர் சிங் கடிதம் எழுதியதும் விதிமுறை மீறல் என பரம்பீர் சிங்கிற்கு எதிராக நடந்த துறைரீதியான விசாரணையில் தெரியவந்து உள்ளது.



Next Story