திருவள்ளூர் மாவட்டம் வாகன சோதனையில் ரூ.13 லட்சம் கார் சாவிகளை திருடிய 2 பேர் கைது


திருவள்ளூர் மாவட்டம் வாகன சோதனையில் ரூ.13 லட்சம் கார் சாவிகளை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2021 1:41 PM GMT (Updated: 30 Nov 2021 1:41 PM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் மப்பேடு போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ரூ.13 லட்சம் மதிப்பிலான கார் சாவிகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாகன சோதனை

மப்பேடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உளுந்தை கிராமத்தில் மப்பேடு போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில், ஒருவர் திருவள்ளூர் அடுத்த குன்னவலம் கிராமத்தை சேர்ந்த உமாகாந்த் (வயது 22), மற்றொருவர் தொடுகாடு கிராமத்தை சேர்ந்த செந்தில்வேல் (40). தொடுகாடு அருகே மப்பேடு செல்லும் சாலையில் பழைய இரும்பு கடை வைத்திருப்பதாக கூறினர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

திருட்டு

விசாரணையில் உமாகாந்த் பணியாற்றும் தொழிற்சாலையில் இருந்து பொருட்களை சிறுக, சிறுக திருடி வந்து தொடுகாடு பகுதியில் உள்ள செந்தில்வேல் காயலான் கடையில் கொடுத்து வந்ததை ஒப்புக்கொண்டார். மேலும், கடந்த ஜூலை 6-ந் தேதி உமாகாந்த் தொழிற்சாலையில் இருக்கும்போது செந்தில்வேல் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று பொருட்களைத் திருடி வந்ததையும் ஒப்புக்கொண்டனர். திருடிய பொருட்களை 2 பேரும் வெவ்வேறு கடையில் விற்பனை செய்துள்ளனர். அதற்கான பணத்தை வாங்க சென்னைக்கு சென்றதாகவும் கூறினர்.

சிறையில் அடைப்பு

இதனால் மப்பேடு போலீசார் உமாகாந்த், செந்தில்வேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புதுப்பேட்டையை சேர்ந்த கனகராஜ் என்பவரிடம் இருந்து உமாகாந்த், செந்தில்வேல் ஆகிய இருவருக்கும் கொடுக்க வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், ரூ.13 லட்சம் மதிப்புள்ள 153 கார் ரிமோட் சாவிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story