தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழை வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பியதால் அதிக அளவில் பிடிபடும் நத்தைகள் கிலோ ரூ.100-க்கு விற்பனை
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை பொதுமக்கள் பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
தஞ்சாவூர்:-
தஞ்சை மாவட்டத்தில் தொடர் மழையால் வயல்வெளிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை பொதுமக்கள் பிடித்து கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறார்கள்.
உணவுக்காக நத்தை
நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில் நில நத்தை என்பது மழை காலங்களில் காடு, ஏரி, குளம் போன்ற தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் காணப்படும். இந்த வகை நத்தை விஷத்தன்மை அற்றது. ஆனால் கடல் நத்தைகளில் விஷம் உண்டு என்பார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலும் நத்தை சாப்பிடும் பழக்கம் அதிக அளவில் உள்ளது. வயல் மற்றும் நீர்நிலைகளில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டால் நத்தை இறந்து விடும். பிறகு அதன் ஓடுகளை உடைத்து நத்தைகளை தனியாக பிரித்து பின்னர் அதனை வேகவைத்து சாப்பிடுவார்கள்.
தொடர் மழையால் வெள்ளம்
தற்போது வடகிழக்கு பருவமழை தஞ்சை மாவட்டத்தில் கடந்த 1½ மாதத்துக்கும் மேலாக பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடந்த 2 நாட்களாக தான் மழையின் தாக்கம் குறைந்து வெயில் காணப்படுகிறது.
தஞ்சை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிகளில் நீர்நிலைகள் அதிகமாக உள்ளன. இங்கு ஏரி, குளம், குட்டைகள், பாசன வாய்க்கால்கள் அதிகமாக உள்ளன. இதில் நெல் வயல்கள் மற்றும் நீர் நிலைகளில் நத்தைகள் அதிக அளவில் காணப்படும். அந்த நத்தைகளை உணவுக்காக பிடிப்பதோடு மட்டும் இல்லாமல் விற்பதும் உண்டு.
தஞ்சை மீன் மார்க்கெட் பகுதிகளில் நத்தைகள் விற்பனை செய்வது உண்டு. நத்தை மருத்துவ குணம் கொண்டது என்பதால் இதனை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். தொடர் மழையால் நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி வழிவதால் தஞ்சை-மன்னார்குடி சாலையில் உள்ள காட்டூர், வரவுக்கோட்டை மற்றும் மாரியம்மன்கோவில், அருள்மொழிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகளில் நத்தைகள் அதிகமாக காணப்படுகின்றன.
கிலோ ரூ.100-க்கு விற்பனை
நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் குளம், வயல் களில் உள்ள நத்தைகளை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் பிடித்து வருகிறார்கள். ஆங்காங்கே வயல்வெளிகளில் காணப்படும் நீர் நிலைகளிலும் நத்தைகளை் பிடித்து வருகிறார்கள். சிலர் நத்தைகளை பிடித்து சாலை ஓரத்திலேயே வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கிறார்கள். தற்போது இந்த பகுதிகளில் ஆங்காங்கே நத்தைகள் பிடிப்பதை காணமுடிகிறது.
Related Tags :
Next Story