விழுப்புரம் அருகே மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை 10 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
விழுப்புரம் அருகே மழை வெள்ளத்தில் சாலை அடித்துச்செல்லப்பட்டதால் 10 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது
விழுப்புரம்
தரைப்பாலங்கள் மூழ்கியது
வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள ஏராளமான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் பலத்த மழையினால் தென்பெண்ணையாறு, பம்பை ஆறு, மலட்டாறு, கோரையாறு, சங்கராபரணி ஆறு, வராக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கிராமப்புறங்களில் உள்ள பல தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. விழுப்புரம் அருகே பள்ளியந்தூர், அகரம்சித்தாமூர், பில்லூர் ஆகிய இடங்களில் உள்ள தரைப்பாலங்களை நேற்று 3-வது நாளாக மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
இதனால் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
வடியாத வெள்ளத்தால் மக்கள் அவதி
இந்நிலையில் மாவட்டத்தில் 3 நாட்களாக தொடர்ந்து பெய்த மழை நேற்று சற்று ஓய்ந்து சூரியன் தலைகாட்ட தொடங்கியது. இருந்தபோதிலும் பல இடங்களில் குடியிருப்புகளை சூழ்ந்திருந்த தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.
குறிப்பாக விழுப்புரம் பொன்அண்ணாமலை நகர், ஆசிரியர் நகர், லிங்கா நகர், போதி தர்மன் நகர், சுதாகர் நகர், சுபிக்ஷா கார்டன், கணேஷ் நகர், ராகவன்பேட்டை, சாலைஅகரம் இந்திரா நகர், குச்சிப்பாளையத்திற்கு செல்லும் வழியில் உள்ள அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் வடியாததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
வெள்ளத்தில்அடித்துச்செல்லப்பட்ட சாலை
பம்பை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் நேற்று விழுப்புரத்தில் இருந்து ஏழுசெம்பொன் செல்லும் வழியில் உள்ள ஆரியூர் கிராம சாலையை மூழ்கடித்தாற்போல் ஆர்ப்பரித்துச்சென்றது. இவ்வாறு நேரம் செல்ல, செல்ல தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் அந்த சாலையில் அரிப்பு ஏற்பட்டு பாதியளவு சாலை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.
இதன் காரணமாக வேடம்பட்டு, ஆரியூர், சாணிமேடு, வெங்கந்தூர், எடப்பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு வாகன போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்காகவும், வேலை விஷயமாக விழுப்புரம் வருவதற்கும் அவர்கள் சுமார் 10 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு சூரப்பட்டு வழியாக விழுப்புரம் வந்து செல்கின்றனர். ஒரு சிலர், ஆபத்தை உணராமல் ஆரியூர் சாலையை கடந்து செல்கின்றனர்.
Related Tags :
Next Story