கொடைக்கானலில், வேரோடு சாய்ந்த மரங்கள்
சூறைக்காற்றுடன் கொட்டித்தீர்த்த கனமழையினால் கொடைக்கானலில், வேரோடு மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கொடைக்கானல்:
சூறைக்காற்றுடன் கூடிய மழை
‘மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி இந்த ஆண்டில் 15 முறைக்கும் மேல் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளும் நிரம்பி உள்ளன.
இந்நிலையில் நேற்று முன்தினம் லேசான சாரல் மழை பெய்த நிலையில் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை 7 மணி வரை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து மாலை வரை விட்டு விட்டு கனமழையும், சாரல் மழையும் பெய்து கொண்டே இருந்தது.
மின்சாரம் துண்டிப்பு
இதன் எதிரொலியாக கொடைக்கானல்-வில்பட்டி சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அது மின்சார வயர்கள் மீது விழுந்ததால், மின்கம்பங்கள் உடைந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன.
இதேபோல் பழனி செல்லும் மலைப்பாதையில், பெருமாள் மலை அருகே ஆனைமுடி சோலை என்ற இடத்தில் 5-க்கும் மேற்பட்ட மரங்கள் அடுத்தடுத்து விழுந்தன. இதனால் கொடைக்கானல்-பழனி மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுமட்டுமின் பூம்பாறை கிராமத்துக்கு செல்லும் மலைப்பாதை மற்றும் கொடைக்கானல் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள சாலைகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
மின்வயர்கள் மீது மரங்கள் விழுந்ததால், கொடைக்கானல் பகுதியில் உள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 11 மணி வரை 15 மணி நேரத்துக்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.
ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளம்
இதனையடுத்து நெடுஞ்சாலைத்துறை மின்சாரதுறை, தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினர் சம்பவ இடங்களுக்கு சென்று மரங்களை வெட்டி அகற்றினர். தொடர்ந்து மாலை வரை பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
தொடர்மழையினால் நகர்ப்பகுதியில் உள்ள ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் சுற்றுலா இடங்களிலும் 80 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
குறிப்பாக கொடைக்கானலின் நுழைவு வாயிலில் உள்ள வெள்ளிநீர் வீழ்ச்சியில் பயங்கர இரைச்சலுடன் தண்ணீர் ஆர்ப்பரித்தது. அதன் அருகே நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தனர். மழையை தொடர்ந்து, கொடைக்கானலில் கடும் குளிர் நிலவியது.
Related Tags :
Next Story