கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கான நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கான நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2021 10:03 PM IST (Updated: 30 Nov 2021 10:03 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளுக்கான நீர் வரத்து வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பயிர் சேதம் கணக்கெடுப்பு

கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில் வடகிழக்கு பருவமழையினால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சேதமடைந்த மரவள்ளி, மஞ்சள் பயிர்களை இதுவரை கணக்கீடு செய்யவில்லை. 

மழையால் பாதிக்கப்பட்ட பருத்தி, மக்காச்சோளம், மஞ்சள், மரவள்ளி, நெல், கரும்பு, உளுந்து பயிர்களை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். பிடித்தம் செய்துள்ள கரும்பு நிலுவைத்தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வீட்டுமனைப்பட்டா கொடுத்து பல வருடங்களாகியும் பட்டா திருத்தம் செய்ய வில்லை. 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் மற்றும் ஏரிக்கு தண்ணீர் வரும் நீர் வரத்து வாய்கால்களில் உள்ள ஆக்கரமிப்புகளை அகற்றி தூர்வார வேண்டும். யூரியா உரம் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து பேசினர்.

உரம் இருப்பு

இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் பதிலளித்து பேசுகையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களின் பாதிப்பு விவரங்களை கணக்கெடுக்கவும் மற்றும் உரிய நிவாரணம் வழங்கவும் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வேளாண்மை மற்றும் தோட்க்கலை பயிர்களுக்கு தேவையான 2427 மெ.டன் யூரியா, 726 மெ.டன் டி.ஏ.பி., 1675 மெ.டன் பொட்டாஷ், 833 மெ.டன் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5974 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் தொடக்க வேளாண்மை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ளது.

கரும்பு பயிரில் இடைக்கணு புழு தாக்குதலை கட்டுப்படுத்த மாவட்டத்திலுள்ள கரும்பு ஆலை மற்றும் வேளாண்மை துறை சார்ந்த அலுவலர்களிடம் ஆலோசித்து ஒட்டுண்ணி மையம் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பங்கு தொகையினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு அகற்றப்படும்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு தூர்வாரப்படும். வருவாய்த்துறை தொடர்பான சான்றுகள் அனைத்தும் விவசாயிகளுக்கு விரைவாக கிடைத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

விவசாய பயிர்க்கடன் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கிடவும், விவசாயப் பணிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கிட தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

கட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயராகவன், கோட்டாட்சியர்கள் சரவணன், சாய்வர்த்தினி மற்றும் தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவுத்தறை மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரிதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story