நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடம் அருகே மழையால் மூழ்கிய பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே மழையால் மூழ்கிய பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அழுக தொடங்கிய பயிர்கள்
கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியில் குமரக்கோட்டகம், வேம்படி, இருவகொள்ளை, வாடி, கேவர்ஓடை வெள்ளகுளம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1500 ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரகாலத்துக்கும் மேலாக பெய்து வரும் தொடர் கனமழையால் இந்த பகுதிகளில் பயிரிடப்பட்ட 2 மாதங்களே ஆன சம்பா பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழுக தொடங்கியுள்ளது.
வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் இந்த பகுதிக்கு கணக்கெடுக்கும் பணிக்கு வந்திருந்தனர்.
அவர்களை விவசாயிகள் தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரண தொகையாக ஒரு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படும் இடுபொருட்கள் தங்களுக்கு தேவையில்லை என்பதை வலியுறுத்தி அழுகிய பயிர்களை கையில் ஏந்தி வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடிகால் வசதி
பின்னர் விவசாயிகள் கூறும்போது, முடவன் ஆற்றில் கதவணையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாததாலும், இப்பகுதியில் வடிகால் வசதி இல்லாததாலும் விளை நிலங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. எனவே இப்பகுதி விவசாயிகள் நலன் கருதி நிரந்தரமாக வடிகால் வசதியை ஏற்படுத்தி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story