விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போன 5 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு போலீசார் விசாரணை
கறம்பக்குடி அருகே விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போன சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கறம்பக்குடி:
5 வயது சிறுவன்
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை தாலுகா பெரியகோட்டை மோகனூர் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா (வயது 36). சலவை தொழிலாளி. இவரது மனைவி அஞ்சலி (30). இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 5 வயதில் மாதேஷ் (5) என்ற மகனும் இருந்தான்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுவன் மாதேஷ் கறம்பக்குடி அருகே விளாரிபட்டியில் உள்ள தாத்தா மதியழகன் வீட்டிற்கு சென்றிருந்தான். நேற்று முன்தினம் சிறுவன் மாதேஷ் அவனது தாத்தா வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்தான்.
பிணமாக மிதந்தான்
ஆனால் சிறிது நேரத்தில் மாதேசை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடி பார்த்தும், உறவினர் வீடுகளில் விசாரித்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து மாதேசின் தந்தை இளையராஜா கறம்பக்குடி போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே நேற்று மதியழகன் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள குமார் என்பவரின் தோட்டத்தில் இருந்த கிணற்றில் நிரம்பி இருந்த தண்ணீரில் சிறுவன் மாதேஷ் பிணமாக மிதந்தான். இதை கண்டு அவனது பெற்றோர் கதறி அழுதனர்.
சோகம்
இது குறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவன் மாதேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடி கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story