தண்ணீர் தேங்கியதால் ஜலகண்டேஸ்வரர் கோவில் மூடல்
தண்ணீர் தேங்கியதால் ஜலகண்டேஸ்வரர் கோவில் மூடப்பட்டது. வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
வேலூர்
தண்ணீர் தேங்கியதால் ஜலகண்டேஸ்வரர் கோவில் மூடப்பட்டது. வெளியே நின்று பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
ஜலகண்டேஸ்வரர் கோவில்
வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கோட்டை அகழி தண்ணீர் கடந்த 12-ந்தேதி புகுந்தது. இதனால் கோவில் வளாகத்தில் தண்ணீர் தேங்க தொடங்கியது. இதையடுத்து உள்ளே இருக்கக்கூடிய குளம் பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து படிப்படியாக நீர்மட்டம் உயர்ந்தது.
முட்டளவு தண்ணீரில் பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். அகழி நீர்மட்டம் உயர்ந்ததால் கோவிலுக்குள்ளும் நீர்மட்டம் உயர தொடங்கியது. மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் ஆய்வு செய்தார். அப்போது அபிஷேகநீர் செல்லும் வழியாக கோவிலுக்குள் தண்ணீர் வந்ததால் அதை மூடி விட்டு உள்ளே இருக்கக்கூடிய தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார். ஆனால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை.
கருவறையில் தண்ணீர் தேங்கியது
ஊற்று மற்றும் தொடர் மழையால் மீண்டும் கோவில் வளாகத்தில் தண்ணீர் உயர்ந்து கொண்டே இருந்தது. நேற்றுமுன்தினம் அம்மன் சன்னதி கருவறைக்குள் தண்ணீர் புகுந்தது. தண்ணீரில் நின்று கொண்டு அர்ச்சகர்கள் அம்மனுக்கு பூஜை செய்தனர். இந்தநிலையில் கோவிலில் தொடர்ந்து நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று காலையில் மூலவர் ஜலகண்டேஸ்வரர் சன்னதி கருவறையிலும் தண்ணீர் சூழ்ந்தது. கோவிலுக்குள் பல்வேறு வழிகளில் தண்ணீர் வருகிறது. சுரங்கப்பாதை அமைந்துள்ள இடம், தண்ணீர் வெளியேறும் குழாய், ஊற்று போன்றவற்றிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் கோவிலில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் பாசி பிடித்து வழுக்கி விழவிழக் கூடிய சூழ்நிலை உள்ளது. தண்ணீரும் அசுத்தம் அடைந்து வருகிறது.
கோவில் மூடல்
இதனால் நேற்று காலையில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. உற்சவர் சாமி மற்றும் அம்மனை ராஜகோபுரத்திற்கு வெளியே வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
உள்ளே சென்றால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் வடியும் வரை கோவில் பூட்டப்பட்டிருக்கும் என்றும், கோவிலுக்கு வெளியே பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்றும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story