தளி அருகே சாலையை கடந்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சம்
தளி அருகே சாலையை கடந்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே சாலையை கடந்த காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
காட்டுயானை முகாம்
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாலதொட்டனப்பள்ளி, கொல்லப்பள்ளி, கண்டகானபள்ளி, தாவரகரை, மேடு முத்துக்கோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் காட்டுயானை ஒன்று கடந்த சில நாட்களாக சுற்றித்திரிகிறது. பகல் நேரங்களில் வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் இந்த யானை இரவு நேரத்தில் கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி செல்கிறது.
இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அதேபோல இந்த காட்டுயானையால் கிராம மக்கள் தினமும் அச்சமடையும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கிராமப்பகுதிகளில் சுற்றித்திரியும் இந்த காட்டுயானை தாக்கி விடுமோ என்று கிராமமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
சாலையை கடந்தது
இந்த நிலையில் நேற்று தளி அருகே காட்டுயானை வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையை கடந்து சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து ஆங்காங்கே நின்றனர். பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்ற பிறகு வாகன ஓட்டிகள் சென்றனர். இந்த யானையை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஜவளகிரி வனச்சரகர் சுகுமார், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் முருகேசன் ஆகியோர் தலைமையிலான வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story