12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய வெற்றிலையூரணி கண்மாய்
வெற்றிலையூரணி கண்மாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
தாயில்பட்டி,
வெற்றிலையூரணி கண்மாய் 12 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
தரிசு நிலங்கள்
வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் 2-வது பெரிய கண்மாய் வெற்றிலையூரணி கண்மாய் ஆகும். சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு கொண்ட இந்த கண்மாய் பொதுப்பணித்துறைக்கு உட்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக கண்மாய் தூர்வாரப்படாததால் தண்ணீர் வரவில்லை.
கண்மாய் மடைகள் தூர்ந்து விட்டதால் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து முழுமையாக நின்றது. இதனால் சுற்றுவட்டாரத்தில் பாசனம் செய்யக்கூடிய கீழ தாயில்பட்டி, வெற்றிலையூரணி, தெற்கு ஆணைக் கூட்டம், மேல ஒட்டம்பட்டி, ராமலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் தரிசாக மாறியது.
விவசாயிகள் வேதனை
விவசாயத்திற்கு பயன்படாத வகையில் கருவேல மரங்கள் வளர தொடங்கியதால் விவசாயம் செய்ய முடியாமல் இருந்த நிலையில் ஏராளமான விவசாயிகள் மாற்று தொழிலுக்கு சென்றுவிட்டனர். இதனால் விவசாயம் மிகவும் குறைந்து விட்டது.
இந்தநிலையில் தற்போது எதிர்பாராத வகையில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நீர்வரத்து அதிகரித்து கண்மாய் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. விவசாயம் செய்த காலத்தில் மழை பெய்யாமல் விவசாயம் நின்றுபோன பிறகு மழை பெய்து கண்மாய் நிரம்பி உள்ளதை பார்த்து விவசாயிகள் நிலங்களை முன்கூட்டியே பராமரிக்க முடியாமலும் விவசாயம் செய்ய முடியாமல் கண்மாயை பார்த்து வேதனை அடைந்தனர்.
நடவடிக்கை
இதுகுறித்து விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:-
வெற்றிலையூரணி பெரிய கண்மாயை தூர்வாரவும், கரைகளை பலப்படுத்தவும், மடைகள் தூர்ந்துள்ளதை சரி செய்யவும் பலமுறை பொதுப்பணித்துறை அதிகாரியிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நிலங்கள் தரிசாக மாறிவிட்டன.
விளை நிலங்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது கண்மாய் முழுமையாக நிறைந்துள்ளது. இருந்தாலும் குறைந்த அளவு விவசாய பணிகள் நடந்து வருகின்றன. இனிமேலாவது பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்மாய் கரையை பலப்படுத்தவும், வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கும், கண்மாயை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story