இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு வாலிபர் மறுப்பு


இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு வாலிபர் மறுப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 1:34 AM IST (Updated: 1 Dec 2021 1:34 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில், காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி உல்லாசம் அனுபவித்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு திருமணத்திற்கு மறுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இளம்பெண்ணிடம் உல்லாசம்

பெங்களூரு பகலகுண்டே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தாசரஹள்ளி பகுதியில் வசித்து வருபவர் அருண். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் இடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் 2 பேரும் நட்பாக பழகி வந்தனர். இந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணிடம் உன்னை காதலிக்கிறேன் என்று அருண் கூறியுள்ளார்.

அவரது காதலை இளம்பெண்ணும் ஏற்றுக்கொண்டு உள்ளார். இதன்பின்னர் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக தெரிகிறது. அப்போது திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகள் கூறி இளம்பெண்ணிடம், அருண் அடிக்கடி உல்லாசம் அனுபவித்ததாக தெரிகிறது. மேலும் பல்வேறு காரணங்களை கூறி இளம்பெண்ணிடம் இருந்து அருண் ரூ.4 லட்சம் வரை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.

வாலிபர் மீது வழக்கு

இந்த நிலையில் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவர் அருணிடம் கூறினார். மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படியும் கேட்டு கொண்டார். ஆனால் அருண் இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததுடன், கருவை கலைத்து விடும்படி சொல்லியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்யும்படி அருணை வற்புறுத்தி வந்து உள்ளார்.

ஆனாலும் திருமணத்திற்கு மறுத்த அருண் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த இளம்பெண் அருண் மீது பகலகுண்டே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் அருண் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

Next Story