தொழிலாளியின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு


தொழிலாளியின் உடல் 3 நாட்களுக்கு பிறகு  மீட்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 1:40 AM IST (Updated: 1 Dec 2021 1:40 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே ஆற்றில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த தொழிலாளியின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.

திருவட்டார்:
திருவட்டார் அருகே ஆற்றில் குளிக்க சென்ற போது வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்த தொழிலாளியின் உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. 
குளிக்க சென்றவர்
திருவட்டார் அருகே உள்ள அணக்கரை முளங்கூட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டேவி என்ற டேவிட்சன் (வயது 49), தொழிலாளி. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அருவிக்கரை தடுப்பணை பகுதியில் பரளியாற்றில் குளிக்க சென்றார். 
ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தது. டேவிட்சன் ஆற்றங்கரையோரம் குளித்துக் கொண்டிருந்த போது வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். இதனை கவனித்த சிலர் திருவட்டார் போலீசாருக்கும், குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.  
போலீசார் மற்றும் குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட டேவிட்சனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த 3 நாட்களாக அவரை தேடும் பணி நடந்தது. 
பிணம் கரை ஒதுங்கியது
இந்தநிலையில் நேற்று காலை திருவட்டார் தோட்டவாரத்தை அடுத்த திலுப்பிச்சிவிளையில் ஆற்றங்கரையோரம் ஒரு ஆண்பிணம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து அந்த பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது அது டேவிட்சனின் பிணம் என்பது தெரியவந்தது. தொடர்ந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த டேவிட்சனுக்கு  விமலா என்ற மனைவியும், 13 மற்றும் 12 வயதில் 2 மகன்களும் உள்ளனர். 
குளிக்க சென்ற போது ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story