மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால்  குண்டர் தடுப்பு சட்டம் பாயும் கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Dec 2021 1:56 AM IST (Updated: 1 Dec 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் குண்டர் தடுப்பு சட்டம் பாயும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம்
ஆய்வுக்கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசியதாவது:-
பள்ளிகள், கல்லூரிகள், பணிபுரியும் இடங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படும் சூழ்நிலையில் மன உளைச்சலால் பல்வேறு இழப்புகள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது. சேலம் மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து வகை பள்ளிகளிலும் புகார் பெட்டிகள் அமைக்கப்பட்டு, அதுபற்றிய விவரத்தை மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் பெட்டி குறிப்பிட்ட கால இடைவெளியில் நீதித்துறை, வருவாய்த்துறை, போலீஸ் துறை ஆகியோர் கொண்ட குழுவால் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதியில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலைய தொலைபேசி எண்களை பள்ளியின் தகவல் பலகையில் எழுதியிருக்க வேண்டும்.
குண்டர் தடுப்பு சட்டம்
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து 181 என்ற எண்ணிலும், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து 1098 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். பள்ளியில் மாணவிகளுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கிட ஒரு ஆசிரியையை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story