ரமேஷ் ஜார்கிகோளி மீதான கற்பழிப்பு வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு புதிய உத்தரவு
ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, சிறப்பு விசாரணை குழுவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு: ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய, சிறப்பு விசாரணை குழுவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ஆபாச வீடியோ
முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவின் மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிகோளி. இவர் ஒரு இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ கடந்த மார்ச் மாதம் வெளியானது. அரசு வேலை வாங்கி தருவதாக கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றினார் என்று ரமேஷ் ஜார்கிகோளி மீது இளம்பெண் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின்பேரில் பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது கற்பழிப்பு உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக ரமேஷ் ஜார்கிகோளி தரப்பில் அளித்த புகாரின்பேரில் இளம்பெண் மீதும் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆபாச வீடியோ வழக்கு குறித்து சிறப்பு விசாரணை குழுவுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டு இருந்தது.
காணொலி காட்சி மூலம் விசாரணை
ஆனால் சிறப்பு விசாரணை குழு மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், அந்த விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோர்ட்டில் இளம்பெண் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 3 முறை போலீசார் கோர்ட்டில் அறிக்கையும் தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் இந்த வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை சிறப்பு விசாரணை குழு அதிகாரி சவுமேந்து முகர்ஜி நன்றாக ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும், இறுதி அறிக்கையை கோர்ட்டில் சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று ரமேஷ் ஜார்கிகோளி ஆபாச வீடியோ வழக்கு குறித்த விசாரணை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி முன்னிலையில் காணொலி காட்சி மூலம் நடந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பிரசன்ன குமார், ஆபாச வீடியோ வழக்கு குறித்த இறுதி அறிக்கையை சவுமேந்து முகர்ஜி ஆய்வு செய்து ஒப்புதல் அளித்து உள்ளார். இதனால் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இளம்பெண் வக்கீல் எதிர்ப்பு
அப்போது இளம்பெண் சார்பில் ஆஜரான வக்கீல் இந்திரா ஜெயசிங் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்தார். சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கே ரமேஷ் ஜார்கிகோளி கூறியதால் தான் அரசு உத்தரவிட்டது. இந்த விசாரணை அமைப்பில் குறைபாடு உள்ளது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இறுதி விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
‘‘முதலில் அவர்கள் அறிக்கையை தாக்கல் செய்யட்டும். பின்னர் அந்த அறிக்கையில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதுபற்றி இளம்பெண் கேள்வி கேட்கலாம். குற்றம்சாட்டப்பட்டவர் மந்திரியாக இருந்தாலும் சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். நாங்கள் யாரை பற்றியும் கவலைப்பட மாட்டோம்’’ என்று தெரிவித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
முன்னதாக இந்த வழக்கு விசாரணையில் காணொலி காட்சி மூலம் ஆஜரான சாட்சி ஒருவர் அரை நிர்வாணமாக அதாவது சட்டை அணியாமல் கலந்து கொண்டார். இதற்கு வக்கீல் இந்திரா ஜெயசிங் எதிர்ப்பு தெரிவித்தார். அந்த நபருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அந்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் இந்த வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
Related Tags :
Next Story