போலீஸ் குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா


போலீஸ் குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Dec 2021 2:11 AM IST (Updated: 1 Dec 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் கணேசபுரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்:
நாகர்கோவில் கணேசபுரத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
போலீஸ் குடியிருப்பு
குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. எனினும் முழுமையாக கட்டுப்படுத்தப்படவில்லை. தினமும் சுமார் 10 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் 3-வது அலை பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்று ஊடுருவலை தடுக்கவும் கண்காணிப்பு பணிகள் நடக்கிறது.
இதற்கிடையே நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஒரு போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மேலும் 3 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட போலீசார் வசித்து வரும் கணேசபுரம் போலீஸ் குடியிருப்பில் உள்ள அவர்களுடைய குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அந்த முடிவுகள் நேற்று வெளியாகின.
ஒரே குடும்பத்தில்...
அப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு போலீசின் குடும்பத்தினருக்கும் நோய் தொற்று இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது. அதாவது அவருடைய மனைவி மற்றும் 2 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதோடு கணேசபுரம் குடியிருப்பில் மேலும் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. எனவே 4 பேரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே கணேசபுரம் போலீஸ் குடியிருப்பு முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது. கவச உடை அணிந்து வந்த தூய்மை பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி சேகரிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சம்பந்தப்பட்ட குழந்தைகளுடன் தொடர்பில் இருந்த சக மாணவர்களுக்கும் பரிசோதனை நடத்த சுகாதார பணியாளர்கள் முடிவு செய்துள்ளனர். கொரோனாவுக்கு போலீசார் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story