கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை


கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம்: வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை
x
தினத்தந்தி 1 Dec 2021 2:11 AM IST (Updated: 1 Dec 2021 2:11 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மங்களூரு: கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து மங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது. 

கல்லூரி மாணவி கடத்தல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு கோட்டேகார் அருகே தேரலகட்டே பகுதியை சேர்ந்தவர் இர்பான் (வயது 28). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணான பி.யூ. கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசி வந்தனர். இந்த பழக்கத்தின் மூலம் இர்பான், கல்லூரி மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார். 

இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாணவி கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாடேக்கல் பகுதியில் கல்லூரி மாணவியை வழிமறித்த இர்பான், அவரை காரில் கடத்தி சென்றார். 

பலாத்காரம்

பின்னர் கல்லூரி மாணவியை சிக்கமகளூருவுக்கு கடத்தி சென்று அங்குள்ள ஒரு தங்கும் விடுதியில் வைத்து அவரை இர்பான் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதற்கிடையே, கல்லூரிக்கு சென்ற தங்கள் மகள் மாயமாகி விட்டதாக அவரது பெற்றோர் உல்லால் போலீசில் புகார் கொடுத்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கல்லூரி மாணவியை இர்பான் கடத்தி சென்று தங்கும் விடுதியில் வைத்து பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிக்கமகளூருவுக்கு சென்று கல்லூரி மாணவியை மீட்டனர். 

வாலிபர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார், மைனர் பெண்ணான கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் செய்த குற்றத்திற்காக இர்பானை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக மங்களூரு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். மேலும், அப்போதைய உல்லால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவித்ரா தேஜா, கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தார். 

இந்த வழக்கின் விசாரணை மங்களூரு செசன்சு மற்றும் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. 

7 ஆண்டு கடுங்காவல் சிறை

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி சாவித்ரி பட் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில், இர்பான் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால், பலாத்கார குற்றச்சாட்டுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 7 ஆண்டு கடுங்காவல் சிறையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கடத்தல் வழக்கில் 3 ஆண்டு சிறையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டலுக்கு ஓராண்டு சிறையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், வழிமறித்த குற்றத்திற்கு 5 மாதம் சிறையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

இந்த தண்டனையை அவர் ஏக காலத்துக்குள் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதல் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். 

ஆதரவாக சாட்சியம்

இந்த வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டப்பட்ட இர்பானுக்கு ஆதரவாக சாட்சி அளித்தனர். ஆனால், 15 பேரின் சாட்சியங்கள், 22 ஆவண சான்றுகள் மற்றும் அதிகாரிகளின் சாட்சியங்கள் அடிப்படையில் இர்பான் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கூறி நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார்.

Next Story