தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது: தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின மேலநத்தம், சீவலப்பேரியில் போக்குவரத்து துண்டிப்பு


தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது: தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின மேலநத்தம், சீவலப்பேரியில் போக்குவரத்து துண்டிப்பு
x
தினத்தந்தி 1 Dec 2021 2:19 AM IST (Updated: 1 Dec 2021 2:19 AM IST)
t-max-icont-min-icon

தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கின

நெல்லை:
தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்வதால் மேலநத்தம், சீவலப்பேரி தரைப்பாலங்கள் மூழ்கின. அந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கூடுதல் தண்ணீர் திறப்பு 
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் லேசானது முதல் பலத்த மழை வரை கொட்டியது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. அதாவது வினாடிக்கு 20 ஆயிரம்கன அடி வரை தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதுதவிர மலைப்பகுதியில் உள்ள காட்டாற்று வெள்ளம் மூலம் சுமார் 10 ஆயிரம் கன அடி வரை தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது.
மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி அணைகளில் நீர்வரத்து அதிகரித்ததால், அங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. 2 அணைகளில் இருந்து உபரிநீர் மற்றும் ஊர்க்காட்டு குளங்கள் நிரம்பி அதன் உபரி நீரும் தாமிரபரணி ஆற்றில் 5 ஆயிரம் கன அடிக்கு மேல் செல்கிறது. 
தரைப்பாலம் மூழ்கியது
இதனால் தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் சென்றது. இதன் காரணமாக ெநல்லை மேலநத்தம்-கருப்பந்துறை தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. 
இதையடுத்து அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த போலீசார், உடனடியாக இரும்பு தடுப்புகள் கொண்டு பாலத்தின் இரு பக்கமும் அடைத்தனர். அந்த வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாற்று வழியில் வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர்.
மேலும் குறுக்குத்துறை முருகன் கோவில் கல்மண்டபமும் வெள்ளத்தில் மூழ்கியது. கோபுரம், விமானம் மட்டுமே வெளியே தெரிந்தன. கோவிலுக்கு செல்லும் பாலமும் முழுமையாக மூழ்கடிக்கப்பட்டது. அங்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
50 ஆயிரம் கனஅடி நீர் செல்கிறது
நெல்லையை கடந்து சீவலப்பேரி அருகே தாமிரபரணி ஆற்றுடன் சிற்றாறு சேருகிறது. குற்றாலம் அருவிகள் மற்றும் செங்கோட்டை பகுதி மழை வெள்ளம் சிற்றாறு மூலம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் 15 ஆயிரம் கன அடி வரை வந்து கலக்கிறது.
இதனால் ஒட்டுமொத்தமாக தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
சீவலப்பேரி தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி செல்கிறது. இதனால் பர்கிட்மாநகரம் -சீவலப்பேரி இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
நெல்லையில் இருந்து சீவலப்பேரிக்கு செல்வோர் கங்கைகொண்டான் ரெயில் நிலையம் வழியாக சுற்றி சென்றார்கள். இதேபோல் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கருங்குளம் பாலம், வசவப்பபுரம் பகுதிகள் வழியாக சீவலப்பேரிக்கு சென்றனர். இந்த தண்ணீர் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் மருதூர் அணை வழியாக புன்னைக்காயல் கடலில் கலக்கிறது. இதற்கிடையே நேற்று மாலையில் பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.
இதர அணைகள் நிலவரம்
மேலும் மணிமுத்தாறு அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து நேற்று 111 அடியாக உள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 3,683 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 41 அடியாகவும், நீர்வரத்து 350 கன அடியாகவும் உள்ளது. நம்பியாறு அணை நிரம்பி விட்டதால், அணைக்கு வரும் 800 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. கொடுமுடியாறு அணை நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் 300 கன அடி தண்ணீர் மறுகால் பாய்ந்து செல்கிறது.
தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, ராமநதி தவிர மற்ற 3 அணைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் கருப்பாநதி அணையில் இருந்து 174 கன அடி தண்ணீரும், குண்டாறு அணையில் இருந்து 111 கன அடி தண்ணீரும், அடவிநயினார் அணையில் இருந்து 30 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.


Next Story