மக்களை தேடி மக்களின் அரசு திட்டத்தின் கீழ் சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு


மக்களை தேடி மக்களின் அரசு திட்டத்தின் கீழ் சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு
x

மக்களை தேடி மக்களின் அரசு திட்டத்தின் கீழ் சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் மனு

ஊட்டி

நீலகிரியில் ‘மக்களை தேடி மக்களின் அரசு’ திட்டத்தின் கீழ் நடந்த  சிறப்பு முகாமில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் மக்களை தேடி மக்களின் அரசு என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. ஊட்டி நகராட்சியில் காந்தல் பென்னட் மார்க்கெட்டில் உருது நகராட்சி பள்ளியில் சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த மனுக்கள் பதிவு செய்யப்பட்டது.

 முன்னதாக மனுக்கள் அளிக்க வந்தவர்களில், தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி போட முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. நகராட்சி பள்ளியில் நடந்த மனுக்கள் பெறும் சிறப்பு முகாமை நீலகிரி கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்கள் கனமழை பெய்யும் சமயங்களில் காந்தல் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

 எனவே, கால்வாயை தூர்வாரி அடைப்பு இல்லாமல் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மேலும் வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, வீடு வழங்கக்கோரி மனுக்கள் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கலெக்டர் எஸ்.பி.அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

வீடுகளை ஒதுக்க நடவடிக்கை

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் 41 இடங்களில் மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நடந்தது. ரேஷன் அட்டை, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் மீது 3 முதல் 5 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்தி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். 

வீடு கேட்டு கோரிக்கை மனு அளித்தவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் மூலம் நீலகிரியில் கட்டப்பட்டு வரும் புதிய வீடுகளை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உடனிருந்தார்.



Next Story