ஊட்டி ஏரி கரையில் 9 மரங்கள் வெட்டி அகற்றம்
ஊட்டி ஏரி கரையில் 9 மரங்கள் வெட்டி அகற்றம்
ஊட்டி
ஊட்டி ஏரி கரையோரத்தில் மின்கம்பிகள் மீது கிளைகள் விழுவதால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கரையோரத்தில் அபாயகரமான 9 மரங்கள் அகற்றப்பட்டன.
போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து பெய்கிறது. இந்த நிலையில் நேற்று ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை முதலே வெயில் அடித்தது.
மதியத்திற்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பகலில் வெயில் அடித்ததால் பொதுமக்கள் துணிகளை காய வைத்தனர். தொடர் மழை காரணமாக சாலையோர மண் ஈரப்பதமாக உள்ளது. இதனால் பலத்த காற்று வீசும்போது மரங்கள் விழுந்து வருகின்றன.
நேற்று மஞ்சூர்-எடக்காடு சாலை முக்கிமலை பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
இதேபோல மஞ்சூர்-பிக்கட்டி சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மரம் அகற்றிய பின்னர் போக்குவரத்து சீரானது. ஊட்டி துணை மின் நிலையத்தில் இருந்து நகருக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. ஊட்டி ஏரி கரையோரத்தை ஒட்டி மின் கம்பங்கள் வழியாக மின் கம்பிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
9 மரங்கள் அகற்றம்
ஊட்டி ஏரி கரையோரத்தில் மரங்கள் இருப்பதால் மழை நேரங்களில் கிளைகள் விழுவதாலும், உரசுவதாலும் மின் இணைப்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர்.
தொடர்ந்து மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் ஆய்வு செய்ததில் மின்கம்பிகளை ஒட்டி 29 அபாயகரமான மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. முதல்கட்டமாக ஊட்டி ஏரி கரையோரத்தில் இருந்த 9 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது.
தடையில்லாமல் மின் வினியோகம் செய்ய ஏதுவாக மின்வாரியம் மூலம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 நாட்களில் பலத்த மழை காரணமாக ஊட்டியில் 8 மின் கம்பங்கள் சேதம் அடைந்தது. இதனை மின் ஊழியர்கள் சீரமைத்தனர்.
Related Tags :
Next Story