கம்பம் முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.60 லட்சம் மோசடி


கம்பம் முன்னாள் ராணுவ வீரரிடம்  ரூ.60 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 1 Dec 2021 9:02 PM IST (Updated: 1 Dec 2021 9:02 PM IST)
t-max-icont-min-icon

கப்பலில் பாமாயில் அனுப்புவதாக கூறி கம்பத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரிடம் ரூ.60 லட்சத்து 45 ஆயிரம் மோசடி செய்த ஐவரிகோஸ்ட் நாட்டை சேர்ந்தவரை போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.

தேனி: 


முன்னாள் ராணுவ வீரர்
தேனி மாவட்டம் கம்பம் பாரதியார் நகர் 7-வது தெருவை சேர்ந்தவர் அதிர்ஷ்டராஜா (வயது 37). இவர் முன்னாள் ராணுவ வீரர். இவர், எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். மேலும், ஒரு பாமாயில் நிறுவனத்தின் விற்பனையாளராக இருந்து பாமாயில் கொள்முதல் செய்து விற்பனையும் செய்து வந்தார்.
தனது நிறுவனத்தின் பெயரில் பாமாயில் தயாரித்து விற்பனை செய்ய சமூக வலைத்தளங்களில் அவர் விளம்பரம் செய்தார். அதை பார்த்து ஒருவர் மின்னஞ்சல் மூலம் அவரை தொடர்பு கொண்டார். மலேசியாவில் இருந்து கப்பல் மூலம் 50 டன் பாமாயிலை கன்டெய்னரில் அனுப்பி வைப்பதாகவும், அதற்கான தொகையை அனுப்பி வைத்தால் 13 நாட்களில் பாமாயில் இந்தியாவுக்கு வந்து விடும் என்றும் அந்த நபா ஆசை வார்த்தைகள் கூறினார்.
இதையடுத்து வங்கி மூலம் பல்வேறு தவணைகளில் அதிர்ஷ்டராஜா மொத்தம் ரூ.60 லட்சத்து 45 ஆயிரம் அனுப்பினார். ஆனால், பாமாயிலை அந்த நபர் அனுப்பவில்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர், தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்தவர் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர் பணம் அனுப்பிய வங்கி கணக்கில் இருந்து டெல்லியில் உள்ள ஒரு வங்கியில் பணம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து தேனி சைபர் கிரைம் போலீஸ் தனிப்படையினர் டெல்லிக்கு சென்றனர். அங்கிருந்த சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து துப்பு துலங்கினர். 
அப்போது வங்கியில் பணம் எடுத்த நபர், டெல்லி துவாரகா ராஜ்நகரில் வசிப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று ஆர்தர் சில்வஸ்டர் கேவ்மே (34) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்தவர் என்பதும், அவரும் மேலும் சிலரும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து கைது செய்யப்பட்ட ஆர்தர் சில்வஸ்டர் கேவ்மேவை நேற்று முன்தினம் இரவு தேனிக்கு போலீசார் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து காலாவதியான பாஸ்போர்ட் உள்ளிட்ட சில ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story