முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி:
முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. அணைக்கு நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 2,210 கன அடியாக இருந்தது.
அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 2,300 கன அடியும், கேரளாவுக்கு வினாடிக்கு 1,682 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்தது. நேற்று காலையில் நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரத்து 598 கன அடியாக இருந்தது.
இதனால், கேரளாவுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2,616 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 142 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கிக் கொள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், அதற்கு மேல் தண்ணீர் தேங்காத அளவில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு வினாடிக்கு 2,300 கன அடி வீதம் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தை விடவும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 141.90 அடியாக இருந்தது. பிற்பகலில் நீர்மட்டம் 141.95 அடியாக உயர்ந்தது.
Related Tags :
Next Story