நாட்டறம்பள்ளி அருகே குடும்ப தகராறில் ஆசிரியை வெட்டிக்கொலை


நாட்டறம்பள்ளி அருகே குடும்ப தகராறில் ஆசிரியை வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 1 Dec 2021 10:35 PM IST (Updated: 1 Dec 2021 10:35 PM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளி அருகே குடும்ப தகராறில் ஆசிரியையை, மாமனார் கத்தியால் வெட்டிக்கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்தார்.

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி அருகே குடும்ப தகராறில் ஆசிரியையை, மாமனார் கத்தியால் வெட்டிக்கொலை செய்து விட்டு போலீசில் சரண் அடைந்தார்.

ராணுவ வீரர் மனைவி

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த ஜங்களாபுரம் டேக்கன் வட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா (வயது 40). இவர், ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி முருகம்மாள். இவர்களுக்கு மதுநிஷா (11) என்ேற மகளும், ரோகித் (7) என்ற மகனும் உள்ளனர். முருகம்மாள் குரும்பேரி ஊராட்சி ஓன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முருகம்மாள், தனது கணவரை பிரிந்து திருப்பத்தூர் அருகே கந்திலி கெஜல்நாயக்கன்பட்டி பகுதியில் தனியாக மகன், மகளுடன் வசித்து வந்தார். கடந்த 29-ந் தேதி முருகம்மாள் மகன், மகளுடன் ஜங்களாபுரம் பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.

வெட்டிக்கொலை

அப்போது முருகம்மாள் இந்த வீடு எனக்குத்தான் சொந்தம், நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுங்கள் என்று மாமனார் மணியிடம் கூறியாக கூறப்படுகிறது. இதனால் மாமனார், மருமகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். ஆனாலும் மணிக்கு ஆத்திரம் அடங்கவில்லை. நேற்று காலை 7.30 மணியளவில் முருகம்மாள் சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். 

அப்போது ஆத்திரம் அடைந்த மாமனார் மணி, தான் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியால் முருகம்மாளின் கழுத்தில் பின்புறம் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அக்கம் பக்கத்தினர் இதுபற்றி நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வருவதற்குள் கத்தியுடன் சைக்கிளில் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது மருமகளை வெட்டி கொன்றுவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.

மாமனார் கைது 

இது குறித்து தகவலறிந்ததும் வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் இடத்திலேயே விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து முருகம்மாளின் தந்தை முருகேசன் நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்து மணியை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 
குடும்ப பிரச்சினைக்காக மாமனாரே மருமகளை வெட்டிக் கொன்ற சம்பவம் நாட்டறம்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story