21 மாதங்களுக்கு பிறகு கேரளாவுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கம்


21 மாதங்களுக்கு பிறகு கேரளாவுக்கு  மீண்டும் பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 1 Dec 2021 10:36 PM IST (Updated: 1 Dec 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் இருந்து 21 மாதங்களுக்கு பிறகு கேரளாவுக்கு நேற்று மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.

தேனி: 


பஸ் போக்குவரத்து
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம்-கேரளா இடையே பஸ் போக்குவரத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு கேரள மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. தேனி மாவட்டத்தில் இருந்து போடிமெட்டு, கம்பம்மெட்டு, குமுளி மலைப்பாதை வழியாக கேரள மாநிலத்துக்கு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கேரள மாநில எல்லைப் பகுதி வரை மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த வகையில் குமுளியில் தமிழக பகுதி வரையும், போடிமெட்டு, கம்பம்மெட்டு வரையும் பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எல்லை வரை சென்று அங்கிருந்து வேறு வாகனங்களில் புறப்பட்டு சென்று வந்தனர்.

அதிகாலை நேர பஸ்கள்
இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கும் 21 மாதங்களுக்கு பிறகு பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.
தேனி, கம்பம், போடி உள்ளிட்ட இடங்களில் இருந்து கேரள மாநிலம் மூணாறு, பூப்பாறை, நெடுங்கண்டம், எர்ணாகுளம், கட்டப்பனை உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் 20 பஸ்கள் சென்று வருவது வழக்கம். அந்த பஸ்கள் நேற்று பகலில் இருந்து இயக்கப்பட்டன. அதிகாலை நேர பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. இன்று (வியாழக்கிழமை) முதல் அதிகாலை நேர பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
கேரளாவுக்கு பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் பஸ்களில் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. அதுபோல், கேரள மாநில அரசு பஸ்களும் தேனி, போடி, கம்பம் பகுதிகளுக்கு நேற்று இயக்கப்பட்டன. அந்த பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

Next Story