வைகை தண்ணீர் திறந்து விடுவது திடீர் நிறுத்தம்
ராமநாதபுரம் பெரியகண்மாய் முழுகொள்ளளவை எட்டிவருவதால் பாதுகாப்பு கருதி வைகை தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பெரியகண்மாய் முழுகொள்ளளவை எட்டிவருவதால் பாதுகாப்பு கருதி வைகை தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டு உள்ளது.
கன மழை
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வரை இடைவிடாது மாவட்டம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வந்தன.
இதுதவிர வைகை அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் பார்த்திபனூர் மதகு அணையில் இருந்து ராம நாதபுரம் பெரிய கண்மாய்க்கும், வலது மற்றும் இடது பிரதான கால்வாய்களுக்கும் திறந்துவிடப்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் வரும் வழியில் கண்மாய்களுக்கு பிரித்து வழங்கியது போக ராமநாதபுரம் பெரியகண்மாய்க்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. இந்தநிலையில் பெரியகண்மாயின் தண்ணீர் அளவு அதிகரித்து வந்ததை தொடர்ந்து தண்ணீரின் அளவு குறைத்து அனுப்பப்பட்டு மீதம் உள்ள தண்ணீர் கடலுக்கு திறந்துவிடப்பட்டது.
வைகையில் தண்ணீர் திறப்பு
இந்த சூழ்நிலையில் வைகை அணையில் இருந்து நேற்று முதல் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மதனசுதாகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- தற்போது மழை குறைந்து விட்டதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நீர் வரத்து குறைந்து விட்டது. இருப்பினும் வைகை அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளதால் இன்று (2-ந்தேதி) முதல் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
தற்போதைய நிலையில் ராமநாதபுரம் பெரிய கண்மாயின் மொத்த கொள்ளளவான 7 அடியில் தற்போது 5½ அடி தண்ணீர் சேர்ந்துள்ளது. பெருமழை காலம் இன்னும் உள்ளதால் அந்த நேரத்தில் சமாளிக்க முடியாமல் போவதை தடுக்கும் வகையில் தற்போதே வைகை தண்ணீர் பெரிய கண்மாய்க்கு செல்வதை நிறுத்தி விட்டோம்.
மறுகால்
சக்கரக்கோட்டை கண்மாயும் ஏறத்தாழ நிறைந்து மறுகால் செல்வதால் பெரியகண்மாயில் இருந்து சக்கரக்கோட்டை கண்மாய்க்கு இனி தண்ணீர்விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வைகையில் இருந்து வரும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் பெரிய கண்மாயில் விடாமல் நேரடியாக கடலுக்கு திறந்து விடப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 150 கண்மாய்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளன. 300 கண்மாய்கள் 75 சதவீதம் நிறைந்துள்ளன. 50 சதவீதத்திற்கும் குறைவான தண்ணீர் சில கண்மாய்களில் உள்ளன. அவையும் வந்து கொண்டிருக்கும் வைகை தண்ணீரால் விரைவில் நிரம்பிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.
கோரிக்கை
கடலில் வீணாக கலந்துவரும் தண்ணீரை தமிழகத்தின் பெரிய கண்மாய்களின் ஒன்றான ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு திருப்பிவிடவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சோழந்தூர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது கூறியதாவது:- மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழைபெய்து நீர்நிலைகள் நிரம்பி மாறுகால் சென்றுவருகின்றன.
ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு தொடர் மழை மற்றும் கீழநாட்டார் கால்வாயில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் 5 அடி கொள்ளளவில் தற்போது 3 அடியை தாண்டி நிரம்பி வருகிறது.
மராமத்து
மேலும் மழை பெய்துவருவதால் ராமநாதபுரத்தில் இருந்து தண்ணீர் திருப்பி விட வேண்டிய அவசியம் இந்த ஆண்டு ஏற்படவில்லை.
ரூ.19 கோடியில் கண்மாய்கள் மராமத்து செய்யப்பட்டு வருவதால் தண்ணீர் வீணாகாமல் சேமிக்க முடிந்தது. மழைக்காலம் முடிந்ததும் கண்மாய்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றி ஆழப்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.
Related Tags :
Next Story