கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்


கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 1 Dec 2021 10:58 PM IST (Updated: 1 Dec 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கறம்பக்குடி:
குடிநீர் பிரச்சினை 
கறம்பக்குடி அருகே உள்ள செங்கமேடு ஊராட்சியில் பத்துதாக்கு கிராமம் உள்ளது. இங்குள்ள கீழத்தெரு, கோனார்தெரு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளன. இவற்றின் மின்மோட்டார் அடிக்கடி பழுதாகி செயல்படுவதில்லை. மேலும் இந்த ஆழ்குழாய் கிணற்றின் மூலம் வினியோகம் செய்யப்படும் குடிநீர் சேறுமண் கலந்து துர்நாற்றத்துடன் வருவதால் பயன்படுத்த முடிவதில்லை. 
கடந்த 2 ஆண்டுகளாக இந்த பிரச்சினை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. மேலும் இந்த பகுதிகளில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து அவதிபட்டு வருகின்றனர். இதையும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
ஆர்ப்பாட்டம் 
இதனால் ஆத்திரமடைந்த பத்து தாக்கு கிராம பெண்கள் 20-க்கும் மேற்பட்டோர் நேற்று கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டு காலிக்குடங்களுடன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் கேட்டும், வடிகால் வசதி வேண்டியும் கோஷம் எழுப்பினர். 
பின்னர் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நளினி, சுப்பிரமணியன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 
பரபரப்பு 
இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறுகையில், 2 ஆண்டுகளாக குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. வடிகால் இல்லாததால் மழைகாலத்தில் பெரும் சிரமபட்டு வருகிறோம். எனவே ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்த வந்தோம், ஆனால் ஒன்றிய அதிகாரிகள் தற்போதுதான் புதிதாக பொறுப்பு ஏற்று இருப்பதாக தெரியவந்தது.
இதனால் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுத்து உள்ளோம். எனவே விரைவில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். இல்லையேல் ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு மற்றும் சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பெண்கள் காலிக்குடங்களுடன் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story