‘ஒமைக்ரான்’ அச்சுறுத்தல் மும்பை வரும் உள்நாட்டு விமான பயணிகளுக்கு ‘தொற்று இல்லை’ சான்று கட்டாயம்
மும்பை விமான நிலையம் வரும் அனைத்து உள்நாட்டு பயணிகளுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் சான்று கட்டாயம் என மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
தென் ஆப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் புதிய மாறுபாட்டிற்கு “ஒமைக்ரான்” என பெயரிடப்பட்டு உள்ளது.
அச்சுறுத்தல்
இந்த நோய் தொற்று பாதிப்பு உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எனவே இந்தியாவில் இந்த ெதாற்று பரவுவதை தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாதிப்புக்குள்ளான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், போட்ஸ்வானா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்திலேயே அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தொற்று இல்லை சான்று
இந்தநிலையில் ஒமைக்ரான் மும்பையில் அடியெடுத்து வைப்பதை தடுக்க மும்பை மாநகராட்சியும் முனைப்பு காட்டி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஏற்கனவே மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் தெரிவித்தார்.
இந்தநிலையில் மும்பை விமான நிலையம் வரும் உள்நாட்டு பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகடிவ் (தொற்று இல்லை) சான்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மும்பையில் தரையிறங்கும் முன்பு 72 மணி நேரத்திற்குள் இந்த சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.
இது குறித்து விமான நிலையத்திற்கு மும்பை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. மேலும் மும்பை மாநகராட்சியின் இந்த புதிய விதிமுறைகள் குறித்து அனைத்து உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கும் தெரியப்படுத்துமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை அறிக்கை இல்லாத எந்த ஒரு பயணியையும் அனுமதிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டது.
விதிவிலக்கு
இருப்பினும் குடும்ப கஷ்டம் போன்ற தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டுமே பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை அறிக்கையில் விதிவிலக்கு அளிக்க முடியும் என்றும், அவ்வாறு வருபவர்கள் மும்பை விமான நிலையத்திற்கு வந்தவுடன் சோதனை செய்ய அனுமதிக்கப்படலாம் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதேபோல் ஒமைக்ரான் மாறுபாடு பிரச்சினையை அடுத்து மத்திய அரசு அறிவித்துள்ள திருத்தப்பட்ட கொரோனா வழிகாட்டுதல்களை உடனடியாக அமலுக்கு கொண்டுவரும்படியும் விமான நிலைய நிர்வாகத்துக்கு மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
விமான நிலையத்திலேயே பரிசோதனை
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஆபத்தான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் வருகைக்கு பிந்தைய கொரோனா சோதனையை சம்பந்தப்பட்ட விமான நிலையத்திலேயே மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களில் 6 பயணிகளுக்கு இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் மும்பையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story