தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை வந்த தொழிலதிபர்
ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு தொழிலதிபர் வந்தார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் கே.ஆர்.சுப்பையா. இவரது ஒரே மகன் சசிகுமார். இவர் திருப்பூரில் ரெடிமேடு ஆடைகள் கம்பெனி நடத்தி வருகிறார். இதைத்தவிர இவருக்கு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தோனேசியாவில் நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் சசிகுமார் தொழில் விஷயமாக இந்தோனேசியா சென்றிருந்தார். அப்போது சசிகுமாருக்கு, அவரது தந்தை உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது. தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக உடனடியாக சசிகுமார் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து பெங்களூரு வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடிக்கு சாலை மார்க்கமாக வந்தால் காலதாமதம் ஏற்படும் என்று கருதி பெங்களூரிலிருந்து தனியார் ஹெலிகாப்டர் மூலம் நேற்று மதியம் 1.15 மணிக்கு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்கினார். பின்னர் புதுக்கோட்டையில் இருந்து கார் மூலம் சொந்த ஊரான தென்னங்குடிக்கு சென்று தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மீண்டும் ஹெலிகாப்டர் பெங்களூருவுக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்த நிலையில் வானிலை சரியாக இல்லாததால் ஹெலிகாப்டர் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. வானிலை சரியானதும் இன்று (வியாழக்கிழமை) ஹெலிகாப்டர் பெங்களூருக்கு புறப்பட்டு செல்லும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story