வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்


வைகுண்ட ஏகாதசி விழா தொடக்கம்
x
தினத்தந்தி 2 Dec 2021 12:22 AM IST (Updated: 2 Dec 2021 12:22 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம்.டிச.2-
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன்  தொடங்குகிறது. சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.
வைகுண்ட ஏகாதசி விழா
பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. பகல்பத்து. ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை மாதத்திலேயே வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுகிறது.இவ்விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. மறுநாள் (சனிக்கிழமை) பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான திருமொழித்திருநாள் தொடங்குகிறது. அன்றைய தினம் நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.15 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தடைவார். காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை பொதுஜன சேவையுடன், அரையர்கள் நம்பெருமாள் முன் நின்று நாலாயிரம் திவ்யப்பிரபந்த பாடல்களை அபிநயம் மற்றும் இசையுடன் பாடுவார்கள். மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிவரை உபயக்காரர் மரியாதையுடன் பொதுஜன சேவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.
நாச்சியார் திருக்கோலம்
இதே போல் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாள் (13-ந்தேதி) நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார்.
அன்று நம்பெருமாள் நாச்சியார் கோலத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு காலை 7 மணிக்கு பகல் பத்து அர்ச்சுன மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலுக்கு வருகிறார். பின்னர் திருக்கொட்டார பிரதட்சணம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் சேருகிறார். அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.
ராப்பத்து உற்சவம்
மறுநாள் (14-ந்தேதி) ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்றைய தினம் அதிகாலை 3.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு அதிகாலை 4.45 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலில் எழுந்தருள்வார். இதையொட்டி நம்பெருமாள் ரத்தின அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாளுடன் பரமபதவாசலை கடந்து செல்வார்கள். சொர்க்கவாசல் 15, 16, 17, 18, 19 ஆகிய தேதிகளில் பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரையிலும் திறந்திருக்கும். 20-ந்தேதி மாலை 4 மணிமுதல் இரவு 8.30 மணிவரை சொர்க்கவாசல் திறந்திருக்கும். 21-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு இல்லை. 22-ந்தேதி பகல் 1 மணி முதல் இரவு 8 மணிவரையிலும், 23-ந்தேதி காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
வேடுபறி நிகழ்ச்சி
சொர்க்கவாசல் திறப்பு தினமான 14-ந் தேதி முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழித் திருநாள் தொடங்குகிறது. அதன்பின்னர் ராப்பத்து ஏழாம் திருநாளான 20-ந்தேதி நம்பெருமாள் திருக்கைத்தல சேவையும், 8-ம் திருநாளான 21-ந்தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 10-ம் திருநாளான 23-ந்தேதி தீர்த்தவாரியும், 24-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story