சிவகாசியில் கண்மாய்கள் நிரம்புகிறது
சிவகாசி பகுதியில் தொடர்மழையினால் 20-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி உள்ள நிலையில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் தொடர்மழையினால் 20-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி உள்ள நிலையில் விவசாய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
தொடர் மழை
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த 1 வாரமாக மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை மாவட்டத்தில் அதிகமாக சிவகாசியில் 40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தொடர் மழை காரணமாக சிவகாசி, திருத்தங்கல் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள பல கண்மாய்கள் நிரம்பி வருகிறது. சிவகாசி தாலுகாவில் மொத்தம் உள்ள 56 கண்மாய்களில் 20-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி உள்ளது. நிரம்பிய கண்மாய்களில் உடைப்பு ஏற்படாமல் இருக்க வருவாய்த்துறை அதிகாரிகளும், யூனியன் அதிகாரிகளும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
9 கண்மாய்கள்
யூனியன் கட்டுப்பாட்டில் உள்ள நடையனேரி, சித்துராஜபுரம், காரிச்சேரி, ஆனைக்குட்டம், செங்கமலப்பட்டி, வி.சொக்கலிங்காபுரம் ஆகிய பகுதியில் உள்ள 9 கண்மாய்கள் நிரம்பி உள்ளது.
மேலும் 10 கண் மாய்கள் 75 சதவீதம் நிரம்பி உள்ளது. ஓரிரு நாட்களில் இந்த கண் மாய்கள் முழுமையாக நிரம்பும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வண்ணான்குளம் கண்மாய் வேகமாக நிரம்பி வரும் நிலையில் அதன் மதகுபகுதியில் பழுது ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வந்தது. இதை தொடர்ந்து பஞ்சாயத்து தலைவர் லயன் லட்சுமிநாராயணன் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் நேரில் சென்று பார்வையிட்டு மணல் மூடைகளை கொண்டு தண்ணீர் வெளி யேறிவந்ததை சரி செய்தனர்.
தெப்பம்
சிவகாசி பகுதியில் மணிக்கட்டி ஊருணி, பன்னீர்தெப்பம், செண்பக விநாயகர் தெப்பம் உள்ளிட்ட பல தெப்பங்கள் நிரம்பி வருகிறது. கடந்த 10 நாட்களாக சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்கள் இதேபோல் தொடர்ந்து மழை பெய்தால் சிவகாசி பெரியகுளம் கண்மாய்க்கு அதிகளவில் தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. தொடர் மழை காரணமாக சிவகாசியை சுற்றி உள்ள பல கிராமங்களில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.
Related Tags :
Next Story